894திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  2633. (வி-ரை) முன்பாட்டில் பிள்ளையார் அருளியனவாகக் கூறிய மொழிகளைக் கேட்டு அம்மையாரும் அமைச்சனாரும் அவற்றுக்கு விடைகூறும் பகுதியாக அமைந்தது இப்பாட்டு.
  அது - முன்பாட்டில் மொழிந்தருளியது.
  முகமலர்வார் - முகமலர்வாராகி; முற்றெச்சம்; முகமலர்ச்சி அகமலர்ச்சியினால் விளையும் மெய்ப்பாடாகி அதனைக் காட்டி நிற்றலால் அகமலர்ச்சியினை வேறு கூறாராயினர்.
  இடர்க்கடலிடை நின்று....எடுத்தருள - ஏகதேச வுருவகம்; அடியோமை - அரசனையும் நாட்டவரையும் உள்ளடக்கிய உளப்பாட்டுத் தன்மைப் பன்மை; எடுத்தல் - துன்ப நீங்கி யின்பமடைவித்து மேலோங்கச் செய்தல்.
  தென்னாடு செய்தவத்தால் - தென்னவனாடு என்றது தென்னாடு என மருவிற்று; செய்தவம் - முன் செய்த தவம்.
  பேறுடையோம் என்பெறோம்! - பேறுடையோ மாதலின் வேறென்ன தான் பெறமாட்டோம்? என்றது எழுந்தருளும் பேறுதானே வேறு எல்லாப் பேறுகளையும் தரவல்லது என்பது குறிப்பு; என்பெறோம் - எதிர் மறையும் வினாவும் வேறெல்லாப் பேறும் எளிதில் பெறவல்லோம், எமக்கரியது ஒன்றுமில்லை என்று உடன்பாடும் உறுதியும் குறித்து நின்றன.
  அவர் கேட்டு - என்பதும் பாடம்.
 

735

  2634. (வி-ரை) ஆவதும் அழிவும் - ஆக்கமும் கேடும் என அவ்வத் தொழில்களைக் குறித்த பெயர்களாய் நின்றன; வெல்லுதல் - அழித்தல்; அருளுதல் - ஆகுதல் என இவ்விரண்டும் முன்னர் (2631) அவர்களால் வேண்டப்பட்டமையால் அவையிரண்டும் அவரருளன்றி நிகழா என்பார் எல்லாம் அவர் செயல் என்றார்; ஆக்குதலும் அழித்தலும் என்னாது ஆவதும் அழிவும் என்றது அவர் செயலினாலே இவை தாமே விளைவன என்றபடி. அவர் - அவன் என்று மறைகளுட் பேசப் பெற்ற அவர் என உலகறி சுட்டு.
  அவர் செயல் - ஆதலின் - திருவுள்ளம் அறிவேன் என்று காரணப் பொருள்படக் கொள்க.
  பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள்; காரி - செய்பவன்; அதன் மேல் கள் விகுதி பெற்றது. பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க - பாவிகளைப் பார்த்தலும் பழுது; நோக்கும் பழுது - நோக்குதலால் விளையும் தீமை; "பிரட்டரைக் காணாகண்; வாய்பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா); "வெண்ணீறணி கிலாதவரைக் கண்டா லம்ம நாமஞ்சுமாறே" (திருமா) என்பன வாதி திருவாக்குக்கள் நிற்கத், "தீயாரைக் காண்பதுவும் தீதே" என்று நீதி நூலும் பேசும்; "கண்டு முட்டு" என்னம் சமணர் கொள்கையும் இந்தக் கருத்துடையதாம்; பாவகாரிகளை நோக்குதல் பழுதாவது போல அவர்களால் நோக்கப்படுதலும் பழுது தருவதாம் என்பதும் அறிந்தோர் மரபு.
  உடன் நீங்க - நோக்கின் அப்பொழுதே அந்தப் பழுது ஊன்றாது கழிய; உடன் நீங்குதல் - தோன்றிய அவ்வளவே அழிவெய்துதல்; பார்த்தலால் வரும் விளைவுகளைப் பற்றி முன் ஆண்டாண்டும் உரைத்தவையும், இனியும், 2636லும், பிறாண்டும் உரைப்பவையும் நினைவு கூர்க.