| (வி-ரை) முன் பாட்டில் பிள்ளையார் திருவீதியில் எழுந்தருளி வரும் எழுச்சியின் சிறப்பினைக் கண்ட நகர மாந்தர் வாக்கில் வைத்துக் கூறினார்; இப்பாட்டில், அவ்வெழுச்சியினுடன் அம்மையாரும் அமைச்சனாரு முடன் கலந்து செல்லும் நிலையினைக் கூறுகின்றார். |
| தென்னவன்....பின்வர - அமைச்சர் முன்புசெல்ல - அம்மையார் பிள்ளையாரது பின்பும், அமைச்சனார் முன் செல்லும் திருக்கூட்டத்துடன் முன்புமாக சென்றனர்; அம்மையார் காலவழக்குக்கும் அரசுமரபு வழக்குக்கும் ஏற்பச் சிவிகையிற் பின் சென்றனர்; அமைச்சர் முன்பு தாம் ஊர்ந்து வந்த குதிரையை விட்டுத் தொண்டர்களுடன் நடந்து சென்றனர் என்க; பின்பு வரும் அம்மையாரை முன் வைத்துக் கூறியது சிறப்புப்பற்றி; அமைச்சனார் பரியிலேறித் திருமடத்துக்கு வந்தமை "வருபரியிழிந்து" (2624) என்றதனாலறிக. பிள்ளையார் திருத்தொண்டர் கூட்டத்துடன் செல்லும்போது தாம் பரிமிசைச் சேறல் மரபன்றாதலின் அமைச்சனார் பெருந் தொண்டர்குழாத்துடன் கலந்து முன்பு நடந்து சென்றனர் என்பது; இதனை அவர் ஊர்ந்து வந்த பரியைப்பற்றிக் கூறாது விட்ட தன்மையாற் கருதி யறியவைத்த கவிநயமும் கண்டு கொள்க; எஞ்ஞான்றும் தொண்டர் குழாத்தினை வணங்கி வழிபடும் நிலையினின்றவர் குலச்சிறையார் என்பது அவர்தம் புராணத்துட் கூறியவாற்றானறிக. |
| பிள்ளை - கோயில் - புக்கார் - என்று கூட்டுக; காழிநாடுடைய பிள்ளை - கன்னி நாடுடையான் - என்றமையால் பிள்ளையாரும் அரசனும் ஒப்பத் தத்தம் நிலையில் நாடுகாவல் உடையோர் என்பது குறிக்கப்பட்டது; தடாதகைப் பிராட்டியார் ஆண்டதனால் கன்னிநாடு என்பது பாண்டிநாடு; அரசனும் பிள்ளையாரருளால் இனி சைவத்தலைமை பெறநின்றமை குறிப்பு: பின்னர் "கொற்றவன் - சண்மைப் புரவலர்"(2644) என்னும் குறிப்பும் காண்க. |
| குழாத்துட் செல்ல - என்பதும் பாடம். |
| 745 |
2644 | கொற்றவன் றன்பான் முன்பு குலச்சிறை யார்வந் தெய்திப் பொற்றட மதில்சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற, முற்றுயர் சிறிது நீங்கி முழுமணி யணிப்பொற் பீடம் மற்றவன் " முடியின் பக்கத் திடு" கென வல்ல னானான். | |
| 746 |
| (இ-ள்) கொற்றவன்...கூற - அரசனிடத்து முன்னால் குலச் சிறையார் வந்து சேர்ந்து அழகிய பெரிய மதில் சூழ்ந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது வருகையை அறிவிக்க; முன்துயர் சிறிது நீங்கி - முன் இருந்த துன்பம் சிறிது நீங்கப் பெற்று; மற்றவன் - மற்ற அந்த அரசன்; முழு மணியணி பொற்பீடம் - முழுதும் மணிகளை அணியாகவுடைய பொற் பீடத்தை; முடியின் பக்கத்தே இடுக என - தனது முடியின் பக்கத்தே இடுக என்று சொல்ல; வல்லன் ஆனான் - வலிமை பெற்றவனாயினான். |
| (வி-ரை) கொற்றவன் - புரவலர் - முன் பாட்டின் குறிப்புப் பார்க்க. |
| முன்பு - பிள்ளையாரும் ஏனையோரும் வரம முன்னர்; இவ்வாறு முன்பு வந்து அறிவிப்புச் செய்து வரவேற்கும் வகையில் ஒழுங்கு படுத்திப் பீடமிடச் செய்த வைத்தல் அரச காரிய ஒழுங்கு முறைகளுள் ஒன்று. |
| வரவுகூற முற்றுயர் சிறிது நீங்கி - நல்வரவு கேட்ட அத்துணையாலே முன் இருந்த துயர் சிறிது நீங்கப் பெற்றான் எனக் காரணப் பொருள்படக் கூற - நீங்கி என்றார்; கூற - கூறக் கேட்டதனால்; "கூற - சொல்ல - ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட"(2619) என்றது காண்க. |