| செவ்வி - தவப்பயன் வந்துகூடிப் பலிக்கும் பரிபக்குவ காலம்; பின்னர் "பினைக ளொத்துத் துலையென நிற்றலாலே"(2717). |
| உறுதலாலே - என்று - சொன்னான் - என்று கூட்டுக. முன்னைத் தவப்பயன் வரும் செவ்வி கூடியிராதாயின் முன்போலவே அமணரது மாயைக்குட்பட்டு நிற்பன என்பதாம். |
| எய்திய தெய்வச் சார்வால் - நீங்கள் தனித்தனி பொருந்திய தெய்வங்களின் சார்பாகிய பலத்தினால்; அவ்வவரின் தெய்வ பத்தினால். "மருத்து நூலவர்......தொழில் யாவையும் செய்யவும் மேன்மேல், உருத்தெ ழுந்தவெப் புயிரையும் உருக குவதா"யிற்று(2611); ஆதலின், மருந்தினா லன்றி மணி மந்திரங்களாகிய தெய்வபலத்தினாலேதான் தீரத்தக்கதென்று கண்டறிந்துகொண்ட அரசன் கூறியபடி. |
| இருதிறத்தீரும் தீரும் - இருபக்கத்தவரும் தனித்தனி தீருங்கள்; "ஒக்கத் தீர்க்க மொழிந்து"(2646) என்று அமணர் கூறியதை மறுத்து, அரசன் இருவரையும் வெவ்வேறு பிரித்துத் தீருங்கள் என்றான். இதுபற்றியே அமணர் "நாங்கள் - ஒருபுடை வாம பாகம், முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்தும்" என்று (2660) பின்னர்த் தமது தொழிலுக்கு இடத்தையும் காலத்தையும் வேறு பிரித்துக் கூறுவது காண்க. |
| கைதவம் - வஞ்சனை - நடுநிலை கோணிய பண்பு, அதுபற்றி வரும் மொழிக்கு ஆயிற்று; ஆகுபெயர். |
| கைதவன் - பாண்டியர்களது மரபுப்பெயர்; கைதவம் - கைதவன் - சொற்பின் வருநிலை. கைதவனும் - முன்னரெல்லாம் அமணர்க்குடன் பட்டிருந்த அவனும் என உம்மை சிறப்பும்மை. |
| 749 |
2648 | என்றவ னுரைப்பக் குண்ட ரெண்ணங்கெட் டிருந்த வெல்லைத் தென்றமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் வன்றனிப் பவன முன்னர் வாயிலு ளணைந்து மாடு பொன்றிகழ் தரளப் பத்திச் சிவிகைநின் றிழிந்து புக்கார். | |
| 750 |
| (இ-ள்) என்றவன்.......எல்லை - என்று அரசன் சொல்ல அமணர்கள் தமது கருத்துச் சிதைந்து மனங் குன்றி் இருந்த அளவில்; தென்தமிழ்.....போல்வர் - தென்றமிழ் நாடாகிய பாண்டியநாடு முன்னர்ச் செய்த செய்தக்க தவத்தின் கொழுந்து போல்வாராகிய பிள்ளையார்; வன்தனி.....புக்கார் - வலிய ஒப்பற்ற அரண்மனையின் முன்புள்ள வாயிலினுள்ளே சேர்ந்து பக்கங்களில் பொன் பூண்டு விளங்கும் முத்துக்கள் நிரைத்த சிவிகையினின்றும் இறங்கி உள புகுந்தருளினர். |
| (வி-ரை) எண்ணம் கெடுதலாவது கொண்ட கரு நிறைவேறாமையில் மனமுடைதல். |
| எல்லை - நிலை; இருந்த வேலை என்பது பாடமாயின் இருந்தபோது என்றுரைத்துக் கொள்க. |
| செய்த செய்தவம் - சொல்லணி. செய்தவம் - செயத்தக்கதாகிய நற்றவம்; "செய்தக்க" (குறள்) என்புழிப்போல; தவமென்றபேரால் அதுவரை அமணர் செய்த செய்தக்கவல்லாத அவம்போலாது முன்னர்ச் செய்த செய்தக்க தவம் என்க. |
| கொழுந்து - பிள்ளையாரின் இளமை குறித்தது; இனிமேல் முற்றிய நன்மைகளைத் தரவுள்ள குறிப்பும் காண்க. |