[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்915

  திங்கள் போலும் - ஞான அமுதகலையோடும் குளிர்ச்சி செய்தலால் திங்களை உவமித்தார்; பய வுவமம். வெண்ணீற்றுப் பூச்சின் விளக்கத்தால் நிறம் பற்றி எழுந்த "இரண்டு நிலவின் கடல்கள்(1498)" என்றபடி உரு வுவமமுமாம்" கலை வளர் மதியே" (1990) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. பிள்ளையாரது ஆண்டெல்லை பதினாறான வரும் குறிப்பும் கொண்டது.
  கண்டான் - முன்னை நாளிற் "கண்டுமுட் டடிகண் மார்கள் கேட்டு முட்டி யானும்"(2590) என்ற அரசன முற்செய் தவப்பயன் வந்நெய்தும் செவ்வியுற்றதனால் இங்கு அந்நிலை மாறி விருப்பொடும் கண்டான்; அகப் பொருட்டுறைகளுள் காட்சி என முதற்கண் நிகழும் இயல்பெல்லாம் ஈண்டு வைத்துக் கண்டுகொள்க; "நற்பெரும்பான்மைகூட்ட....விளங்கிழையவரைக் கண்டார்"(285), "பண்டைவிதி கடைகூட்டப் பரவையாருங் கண்டார்"(258); "விதியாற் கண்ணுற்றார்" (ஏயர்கோன் - புரா.226) முதலியவையும், முன் "காட்சிபெற்றார்"(2642) என்றவிடத் துரைத்தவையும் இங்கு வைத்துக் காண்க; "திங்கள் போம் கவுணியர்" என உடம்பொடுபுணர்த்தி ஓதின குறிப்பினால் வெப்பமிக்கார்பாலே திங்களின் வரவு பயன் செய்யுமாறு, பயன் கூர்தர விருப்புடன் கண்டான் என்பது பெறப்பட்டது.
  நீளிருணீங்க நிலத்திடை வந்த திங்கள் - "இருளிரண்டின் மாக்கள், சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய விருளை - செங்கதிரவன் போல்நீக்கும்"(10) என்ற கருத்துக்கள் இங்குவைத்துக் கருதத்தக்கன; முன்னர்ச் செங்கதிரவன் என்ற ஆசிரியர் இங்கு வெப்பு நீக்கமும் அமுத ஞானவொளியும் வேண்டப்படும் குறிப்புணர்த்தக் கலைச் செழுந் திங்கள் என்ற தகுதியும் கவிநயமும் காண்க.
  கண்டான் - இக்காட்சியின் சிறப்பும் பயனும் நோக்கி இதனை விதந்தெடுத்துத் தனியாக ஓதியருளினார்; இதனால் விளைந்த மன நிகழ்ச்சியைப் புறச்செயலால் மேல்வரும் பாட்டிற் கூறுவதும் காண்க.
 

751

2650
கண்டவப் பொழுதே வேந்தன் கையெடுத் தெய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி யதன்மிசை யிருந்தார்; மாயை
கொண்டவல் லமண ரெல்லாங் குறிப்பினு ளச்சங் கொண்டார்.
  (இ-ள்) கண்ட....நோக்கி - கண்ட அப்போதே அரசன் கைகளை எடுத்துத் தூக்கி வழிபடும் பண்பு பொருந்தும்படி நோக்கி; தண்துணர்...காட்ட - குளிர்ந்த மலர்களையுடைய தனது முடியின் பக்கத்தில் இடப்பட்டிருந்த பீடத்தில் எழுந்தருளும் படி கைகளைக் காட்ட; வண்தமிழ்...இருந்தார் - வண்மையுடைய தமிழ் விரகராகிய பிள்ளையார் அதன்மேல் எழுந்தருளி அமர்ந்தருளினர்; மாயை...கொண்டார் - மாயங்களைக் கொண்ட வன்மை யுடைய அமணர்கள் எல்லாரும் குறிப்பினுள்ளே பயங் கொண்டார்கள்.
  (வி-ரை) கண்ட அப்பொழுதே...நோக்கி - கண்ட என்றது முன்னர் விருப்பொடு கண்ட காட்சி.
  கண்ட - முன்பாட்டில் "கண்டான்" என்றபடி கண்ட; அப்பொழுதே - நோக்கி என்க; அக்காட்சியோடு உடனிகழ்ச்சியாய் நோக்கம் நிகழ்ந்தது; இங்கு நோக்கம் என்பது வழிபடும் பண்பு காட்டும் பார்வை குறித்தது; "கண்ணிற் சொலிச்செவியினோக்கு மிறைமாட்சி "என்புழிப்போலக் கொள்க; நோக்குதல் - ஒரு குறிப்பினொடு