| ஆருகத நூல்களிற் கண்ட பொருள்களை எடுத்துச் சொல்லித் தலைகள் திமிர்க்கும்படி குரைத்தார்கள். |
| 756 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 2653. (வி-ரை) உள்ள நிறை பொறாமையினால் - அவருள்ளத்தில் முன்னர் மிக்கு நிறைந்திருந்தமை காரணமாக; ஈண்டுப் பொறாமையாவது அறநெறியை முன் காட்டி வஞ்சனை பொய் முதலிய உபாயங்களால் சைவத்தை ஒடுக்கித் தாமே வாழ வேண்டு மென்ற மனநிலை குறித்தது; இது அழுக்காறு எனப்படும்; "அழுக்கா றவா வெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்கா வியன்ற தறம்"(குறள்) என்ற விடத்து அழுக்காறு என்பதற்கு ஆசிரியர் பதிமேலழகர் பிறராக்கம் பொறாமை என்றுரைத்தது காண்க. |
| பொறாமையினால் கண்கள் சிவந்து பல சொல்லுவார் - அழுக்காற்றினால் அவாவும், அது முற்றுப்பெறாதபோது வெகுளியும், அது பற்றிக் கடுஞ் சொல்லும் என இவை ஒன்றுபற்றி ஒன்றாக மேன்மேல் தொடர்ந்து வரும் என்று முன் திருவள்ளுவர் கூறியபடி ஈண்டு அமணர் பொறாமையினால் கண்சிவந்து பல சொல்வாராயினர் எனக்கண்டு கொள்க; மேலும் இறுதியில் இப்"பொறாமை காரணமேயாகத், தங்கள்வாய் சோர்ந்து தாமே தனிவாதி லழிந்தோ மாகில், வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே யென்று சொன்னார்" (2696) என்பதும், "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்"(குறள்) என்றபடி அதுவே அவர்களை அழிவின்கட் செலுத்துவதும் காண்க. |
| உள்ள நிறை - அழுக்காறுவந்தபோது அதுவேறு எந்த நற்குணத்துக்கும் இடந்தராது தானே உள்ளத்தை முழுதும் கவர்ந்து கொள்ளும் என்பது. |
| உழையிருந்த காரமணர் - அரசணது நோய் கேட்டு வந்து அதனைத் தீர்ப்பதற்குச் சூழ்ந்து நின்ற அமண குருமார்; கார் என்றது புறக்கருமையும் அகக்கருமையும் குறித்தது; அழுக்காறு முதலிய தீக்குணங்கள் தாமதத்தினின்றும் போதுவன என்பதும், தாமதத்துக்கு நிறம் கருமையாகக் கூறப்படுவதும் காண்க; அழுக்காறு முதலிய நான்களையும் இழுக்கென்று தள்ளாது கைக்கொண்டு ஒழுகுதலின் இவர்கள் புறத்துக் காட்டுமாறு அறவோராகாது மறவோரேயாவர் என்பதும் குறிப்பு. |
| மனத்திடைக் கொள்ளும் அச்சம் - என்க. இரண்டனுருபும் அத்துச் சாரியையும் தொக்கன; |
| முகம்கோபத் தீத்துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார் - முகத்தின் கண்ணே சினமாகிய தீ துள்ளி எழுவது போல; கோபத்தைத் தீயாகக் கூறுவது மரபு, தன்னை மேற்கொண்டாரைத் தான் உட்படுத்தி எரித்து விடுதல் பற்றி; எரித்தலாவது பலவாற்றாலும் உள்ளும் புறமும் குறைவித்தல்; "உள்ளங் கவர்ந்தெழுந் தோங்குசினம்" என்பது நீதிநூல்; தீக் கொழுந்து விட்டெழுதற் கிடம் முகமாகவும், ஆங்குக் கண்சிவத்தல் தீ யாகவும்; பல சொல்லுதல் தீத்துள்ளி எழுதலாகவும் உவமிக்கப்பட்டன; உருவும் வினையும் பற்றி எழுந்த தொடர் நிலையுவமம்; "எரி துள்ளினாலென வெகுண்டான்" (527); "கதமிக் கெரிகதிர்"(சிவஞான போதம் - 10 - சூத் - வெண்) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "உளத்திடைக் கிளர்ந்தது சினத்தீ; நாட்டம் எரிகால்வ; புகை நண்ணுவன துண்டம்" (மூக்கு); (கந்தபு - அசுரே - மகேந் - செல் - 37) |
| பல - பொருந்தாதவையும் சொல்லத்தகாதவையும் என்பது குறிப்பு; இவை இன்ன என்று கூறாது பல என்றொழிந்தது மிக்குறிப்பும்உயர் கவி மரபுமாம். |