[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்925

  மற்ற இன்னருட் பிள்ளையார் இவர் திருமேனி எளியர் போலும் = இனிய அருள் வன்மையுடையர் ஆயினும் திருமேனி இளையராதலின் எளியர்போலும் என்றபடி.
  போலும் - அருளின் வலிமையால் மேனியும் எளியரல்லாதிருத்தலும் கூடும் என்ற ஐயப்பாடு குறித்தது.
  மற்று இவர் - அதுவரை மன்னனுக்கு மற்றவராய் நின்று இப்போது மன்னனுக்கும் தமக்கும் அணியராயினார் என்ற குறிப்புப்படப் பிள்ளையாரை இவர் என்றார்.
  உவர் எண்ணிலார்கள் - உவர் - உகரச்சுட்டுச் சேய்மைக்கும் அணிமைக்கும் இடைப்பட்ட நிலை குறிக்குமென்ப; ஈண்டு அமணர்கள் அப்போது அரசனுக்கு முற்றும் சேயாருமல்லராய், முற்றும் அணியாரு மல்லராய் நின்ற நிலை குறித்தது. எண்ணிலார்கள் - அரசனது நலமேயன்றித் தந்நலத்தினையும் தாம் கொளுவிய தீயினை ஏவல் கொண்ட பிள்ளையாரது வெற்றிப்பாட்டினையும் எண்ணாதார் என்ற குறிப்புமாம். "அறந்துறந்து தமக்குறுதி யறியாத புல்லறிவோர்" (1360) என்ற கருத்துக் காண்க; உவர் - உவர்த்தலுக்கு - வெறுத்து ஒதுக்குதற்கு - உரியார்கள் என்ற குறிப்புப் படக் கூறியதுமாம்.
  எங்கள் வள்ளலார் நின்மயக்கம் தீர நல்கும் என்க. எங்கள் - அருமைப்பாடு குறித்த பன்மை; தம்மையும் அமைச்சரையும் உளப்படுத்தி முன் நிகழ்ச்சிக் குறிப்புப் பெற வந்த உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்றலுமாம்; மயக்கம் - பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்ந்த மருளினாற் போந்த விளைவு; மயக்கம் அதன் விளைவாகிய நோய் முதலிய தீமைகளின் தொகுதிக்காயிற்று; மயக்கம் - "கருத்தொழிந்துரைமறந்"(2611) திருந்தநிலை சிறிதளவில் நீங்கியும் முற்று நீங்காத மயக்க நிலை.
  பின்னை - முன்னே மயக்கம்தீர அவர் நல்கும், அதன் பின்னே; நல்கும் - உறதி குறித்தது.
  மூள்வார் - பொறாமையும் சினமும் மூளப்பெற்றோர்; வல்லரேல் - வல்லரல்லா தொழிகுவர் என்பது குறிப்பு. பேச - பேசுக; அகரம் வியங்கோள் விகுதி.
 

758

2657
மாறனு மவரை நோக்கி "வருந்தனீ!" யென்று, "மற்று
வேறுவா தென்கொ? லென்மேல் வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக் கன்பரா மிவரு நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீ" ரென்றான்.
 

759

  (இ-ள்) மாறனும்...என்று - பாண்டியனும் மங்கையர்க்கரசி யம்மையாரை நோக்கி "நீ வருந்த வேண்டா" என்று சொல்லி; மாற்று......என்கொல் - பிற வேறு வாது என்ன வேண்டும்; ஆரகர் நீரும்......இவரும் - அருகர்களாகிய நீங்களும் கங்கையைத் தரித்த சடையினையுடையாருக்கு அன்பராகிய இவரும்; என்மேல் வெப்பு ஒழித்து - என்மேல் உள்ள இந்த வெப்புநோயை ஒழியச் செய்து; நீங்கள்..... என்றான் - நீங்கள் அவ்வவர் தெளிந்த தெய்வங்களின் உண்மைத் தன்மையை என்னிடத்தில் விளக்குவீராக என்று சொன்னான்.
  (வி-ரை) மாறனும்....என்றான் - "மன்ன!"(2656) என்று அரசன் என்னும் நிலையில் வைத்து அம்மையார் அஞ்சிக் கூறி முறைப்பாடு செய்து, மிகைபட நிகழ்ந்த அமணர்களது செயலை ஒழுங்குபடுத்த வேண்டினா ராதலின் அந்நிலையினை மேற்கொண்டே அரசன் முறைப்படுத்தி ஒழுங்கு செய்த நிலை கூறப்பட்டது. மாறன் - இதுவரை பற்றி நின்ற அமணர் சார்பினின்றும் மாறிச் சைவ நெறியில் வரவுள்ளவன் என்றதும் குறிப்பு.