| இற்றை நாள் உற்ற - என்றும், இற்றை நாளே தீரும் என்றும் உரைக்க நின்றது. |
| தெற்றென - தெளிய - விளங்க; விரைய என்றலுமாம்; |
| தீர்ப்பவரே - என்று பிரிநிலை ஏகாரம் தொக்கது. |
| வென்றவர், ஆவர் என்று ஆக்கச் சொல் வருவிக்க; இப்பாட்டு அரசன் கூறிய முடிபு; முன்னர்(2657) அருகர் நீரும், அன்பராம் இவரும் தெரிப்பீர் என்று பொதுப்படத் தன்முன் செய்யும் வாதமாவது இது என்று கூறினான்; இங்கு அவ்வாதத்தின் முடிபு இது என்றும் கூறினான்; "வாதுசெயத் திருவுள்ளமே" "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்ற இரண்டு பதிகங்களால் முறையே பெற்ற அருட் குறிப்பின் வழி நிகழ்ச்சிமுறை தொடங்கியவாறு கண்டு கொள்க. |
| சுற்றும் நின்று அழைத்தல் ஓவா - வேறு வாது என்னை? வெப்பொழித்துத் தெரிப்பீர் என்று அரசன் ஆணையிட்டும் ஒழியாது, அக்கிரமித்து வன்கண்ணராய்ப் பின்னரும் குரைத்துக் கொண்டிருந்த; அழைத்தல் - குரைத்தல் - கூவுதல். |
| 761 |
| 2660. (வி-ரை) மன்னவன் மாற்றம் - மாற்றம் - சொல். இங்கு முன்பாட்டிற் கண்டபடி வாதத்தின் முடிபு இது என்று மன்னவன் கூறிய பொருளுக்கு வந்தது; மாற்றம் - மாற்றங்களின் - சொற்களின் - துணிபு; இரட்டுற மொழிதலால் மாற்றம் - மாறிய நிலை என்று கொண்டு ரைத்தலுமொன்று; மாறிய நிலையாவது, "தென்னவன் றானு முன்செய் தீவினைப் பயத்தினாலே, யந்நெறிச் சார்வு தன்னை யறமென நினைந்து நிற்ப"(2498); "தங்கண் மன்னனு மவர்கண் மாயத் தழுந்த"(2510) என்ற நிலைமாறிப் ("செய்தவப் பயன்வந் தெய்துஞ் செவ்விமுன் உறுத லாலே" (2647) முன்னைச் சார்புகொண்ட நிலை நீங்கிப்) பிணியைத் தீர்த்தவரே வாதில் வென்றவராவர் என்று முடிபு கூறியது; "வணிகன்வாய் மாற்றங் கேட்டு"(1764) என்ற காரைக்காலம்மையார் புராணமும் காண்க. |
| வடிவுபோல் மனத்தும் மாசு துன்னிய அமணர் - வடிவு மாசு துன்னுதலாவது உடல் கழுவாமையாலும், பல் துலக்காமை, மயிர் பறித்தல் முதலிய மரபினாலும், "வேர்வந்துற மாசூர்தர வேயிலினின் றுழல்வாரும்" (பின் - தேவா - அண்ணாமலை - நட்டபாடை - 10) என்றபடி வெயிலினிற்றல், சுடுபாறை கிடத்தல் முதலிய ஒழுக்கினாலும் உடலில் மாசு - புற அழுக்கு - மிகுதல்; மனத்து மாசு துன்னுதல் - உள்மாசு என்னும் வஞ்சம் - பொய் - கொலை முதலிய தீமைகள் மனத்தினுட் சார்ந்து பெருகுதல்; இங்குச் சரித நிகழ்ச்சியில் முன் கூறியபடி இவர்களது சொற்செயல்களினாலே இந்நிலை தெளியப்படும். பொறாராய்(2577); சூழ்ச்சி(2578); அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி (2579) செற்றமீக் கொண்ட சிந்தையும் செய்கையுமுடையை (2585); உரை மடத்தில் விஞ்சைமந்திரத் தொழில் விளைக்கச் சூழ்தல்(2556); தீயசெயலும் தீத்தொழிலும்(2596 -2597); மானமிலாது பின்னருஞ் சூழ்தல்(2261); மன்னனுக்குப் பொய்ம்மையும் வஞ்சனையும் புகட்டுதல்(2645) முதலியவை காண்க; அமணர்களது மாகு துன்னிய மனத்துநிலை அரசுகள் புராண வரலாற்றினும், தேவாரங்களினும், தண்டியடிகள் - நமிநந்தியடிகள் புராணங்களினும், பிறாண்டும் உணரப்படும். |
| மனத்தும் - உம்மை - எண்ணும்மை. |
| நாங்கள்.....தீர்த்தும் - இது அமணர் அரசனது முடிபினை ஏற்று வாதினை மேற்கொண்டு தாம் செயல் புரியப் புகுந்த நிலை குறித்தது; உடம்பதனில் வெப்பை ஒருபுடை வாமபாகம் - வெப்பு உடம்பினில் எங்கும் பரவியுள்ளதாக அதனில் ஒருபுடையாகிய இடது பாகத்தில் உள்ள நோயினை; இகலித் தீரும் (2659) என்ற ஆணையை ஏற்று இடப்பாகத்து நோயினை நாங்கள் தீர்க்கின்றோம் என மேற்கொண்டது. |