[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்941

  மிடம்; சாதனம்; புண்ணியம் - சிவபுண்ணியம்; புண்ணியர் - சிவபுண்ணியமுடையவர்; சிவபெருமான் என்றலுமாம், "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன்"(தாண்);- (7) எயில் - மதில்; இங்கு மும்மதில்களையுடைய முப்புரம் குறித்தது; அட்டது - சுட்டது; இருமை - இம்மையும் மறுமையும் வரும் இன்பம்; துயில் - தூக்கம்; இறப்பு என்றலுமாம்; துயில்மறக்கு நிலையாதலின், அதனைத் தடுப்பது சிவனை மறக்காமற் செய்வது என்பதாம்; அயில் - கூர்மை; ஐ - சாரியை;-(8) இராவணன் மேலது - இராவணன் சிறந்த சிவனடியானாதலால் அவன் பூசும் நீற்றினைப் பற்றிக் கூறினார். பராவணம் - பரை - சிவசத்தியின் வண்ணம் - திருநீறு சிவசத்தியின் வடிவம் என்பது நூற்றுணிபு; பரா - பராசத்தி - வடமொழி ஆகார ஈறு; ஸ்திரீலிங்கமாகிய ஆகார ஈற்றுப் பெண்பாற் சொல். தமிழில் பரை என வரும். "நீற்றுப் பதிக நிகழ்த்துங் காலை, மாற்றுப் பரையின் வரலாறாகும்"(பாயிரம்)-(9) மாலொடு அயன் - சிறப்புப்பற்றி ஒடு உருபை மாலுடன் சேர்த்தினார்; திருநீறு இறைவரது வடிவாதலின் அரியயனால் அறியப்படாதென்றார்; உடம்பிடர் - உடம்பின் கண் வரும் இடர் என்றும், உடம்பாகிய(பிறவி) இடர் என்றும் உரைக்க நின்றது; ஆல் - விடம்; ஆல்அமுது உண்ட - ஆலத்தை அமுதாக உண்ட என்க. "ஆலத்தினாலமிர் தாக்கிய கோன்"(திருக்கோவை); "ஆலமே யமுத மாக வுண்டு"(2638)-(10) குண்டிகைக் கையர் - மந்திரித்த நீர்நிறைத்த சிறு கரகத்தை உறியில் தூக்கிக் கையில் ஏந்திச் செல்லும் சமணகுருமார் வழக்குக் குறித்தது; கண் திகைப்பிப்பது - காணமாட்டாது கண்திகைக்கும் படி செய்வது; திருநீற்றின் வலிமையினால் வலப்பாகத்து வெப்பு நீங்கியதும் இடப்பாகத்து வெப்பு நீங்கி வருவதும் கண்ட மேணர் நடுங்கிக் கண் திகைத்த வரலாறும் குறிப்பு; "உறியுடைக் கையர் பாயி னுடுக்கையர் நடுக்க மெய்தி" (2664); சரித அகச்சான்று; எண்திசைப்பட்ட பொருளார் - எட்டுத்திக்குக் காவலர்; இவர்கள் இந்திரன், தீக்கடவுள் முதலியோர்; பொருளார் - தலைவர்; பொருள் - தலைமை; அண்டத்தவர் - எல்லாப் புவனங்களிலும் உள்ள எல்லா வுயிர்களும், அண்டம் - புவனம்;-(11) ஆற்றல் - வல்லமை; அடல் - வெற்றி; "அரண் முரணேறு"(தேவா) அடைந்தாரைக் காக்கும் ஆற்றலும் அடையலரை அடும் வெற்றியும் என்க; ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - "ஆலவாயான் றிருநீறே" என்று பாசுரம்தோறும் துதித்தமை காண்க; துதிக்கப்பட்டது திருநீறேயாயினும் அது தனித்துப் போற்றப்படாமல், அதனையுடைய ஆலவாயானுடன் சேர்த்துப் போற்றப்பட்டதனால் அவனையும் போற்றியதாயிற்று; "நீறே தீர்ப்ப தென்று மறைக ளேத்திப் பகர்"(2662) "பெருமறை துதிக்குமாற்றாற் பிள்ளையார் போற்றி"(2668) என்றும் சரித வரலாறு பற்றி இருமுறை இதனை விளக்குதல் காண்க; தேற்றி - பெருமையை உலகறியச் செய்தல்; அம்மையாரையும் அமைச்சரையும் முன்னர்த் (2629) தேற்றியவாறே என்ற குறிப்புமாம்; "நீங்கள் தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர் என்ற"(2657) அரசனையும் அவ்வாறே நோய் நீக்கிய வகையால் சிவபெருமானது திருநீறே பொருளாவது எனத் தெரிவித்து - தேற்றி - என்றலும் குறிப்பு; தீப்பிணி - தீயபிணி; தீயினால் விளைந்த பிணி என்ற சரிதக் குறிப்புமாம்; பிணியாயின - வலமிடமாகிய இருபக்கத்துப் பிணியும் தீர இவ்வொரு பதிகம் இருபகுதியாக அருளப்பட்டமையின் பிணி ஆயின என்று பன்மையாற் கூறினார்; தீயும் பிணியும் என்று உம்மைத் தொகையாகக் கொண்டு, "வெந்தழல் வெம்மைபோய்ப் பெருந்தழற் பொதி வெதுப்பெனப் பெயர்பெற்ற "தானிய அமணரிட்ட தீயின் விளைவும், அதன் மூலமாகிய மயக்கம்தரும் ஆணவமாகிய மூலநோய்ப் பிணியும் தீர என்றலுமாம்;