| "மானமொன் றில்லார் முன்பு வன்பிணி நீங்க வந்த ஞானசம் பந்தர் பாத நண்ணிநா னுய்ந்தே" னென்றான். | |
| 772 |
| (இ-ள்) மீனவன் - பாண்டியன் - தன்மேல் உள்ள...அங்கை .கூப்பி - தன்மேல் உள்ள வெப்பு முழுதும் உடமே தீர்ந்துபோக அதனால் உண்டாகிய பெரிய இன்பத்தையடைந்து தலையின்மேல் அங்கைகளைக் குவித்துக்கொண்டு; மானமொன்றில்லார்....உய்ந்தேன் என்றான் - மானம் ஒன்றும் இல்லாத அமணர்கள் முன்னே வலிய நோய் நீங்கும்படி வந்தருளிய திருஞானசம்பந்தருடைய திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன்" என்று சொல்லித் துதித்தான். |
| (வி-ரை) இது பிணி நீங்கியுய்ந்தபோது அரசன் நிலையும் செயலும் கூறிற்று; அதுபோழ்து அம்மையார் நிலையும் அமைச்சர் நிலையும் முன்பாட்டிற் கூறினார்; அரசனது நலத்தினும் நாட்டின் நலத்தினும் கருத்துக்கொண்டு இறைவர்பால் வரங்கிடந்து அரும்பாடுபட்ட அவ்விருவரது மகிழ்ச்சி, நலம்பெற்ற அரசனது மகிழ்ச்சியினும் மிக்கு முற்பட்டதாதலின் அவை முன்னர்க் கூறப்பட்டன; நோயின்வாய்ப்பட்ட சேயினைவிட அதன் நலங்கண்ட தாயின் மகிழ்ச்சி முற்படுவதை உலகியல்பிற் கண்டுகொள்க; மீனவன் தன்மேலுள்ள வெப்பெலாம் மாற - என்புழித் தன்மேல் என்றது மிக்குளிப்புக் கொண்டது; தனது நலத்தைத் தான் பின்னரே அறிந்து மகிழ்ந்தான் என்பது. |
| வெப்பெலாம் - வலமிடம் வந்ததும், இடமிருந்ததுமாகிய எல்லாம்; அதன் மூல காரணமாகிய மயக்க வெப்பமும், அதன் காரணமாகிய முன்னை வல்வினை வெப்பமும் என்ற எல்லாம் என்க; தூல சூக்கும காரணம் என்ற மூன்றும் என்பது குறிப்பு; முழுதும் (2168); உடனே - ஒருங்கே; பிள்ளையார் பின்னும் ஒருமுறை திருநீற்றைப் போற்றித் திருக்கையாற் றடவிய உடனே. அக்கணமே என்பதுமாம். |
| ஆன - மாறுதலால் உளதாயின; பேரின்பம் - பெரிய இன்பம்; பேரின்பம் ஆன என்று மாற்றிப் பேரின்பம் எனப்படும் வீடுபேறு என்ற குறிப்புமாம்; இனி நின்றசீர் நெடுமாறனாராக ஆகிச் சீவன்முத்த நிலை பெற்றுப் பிறவி நீங்கிப் பேரின்பம் அடையும் சரிதக் குறிப்புக் காண்க; இங்குப் பேரின்பம் போறலின் பேரின்பம் என்றார். என்னை? நோய் நீங்கவே இன்பானுபவமாதல் இல்லை; இன்ப அநுபவத்துக்கு நோய் தடை செய்வதாதலின் அதன் நீக்கம் இன்ப நுகர்ச்சிக்குத் துணை செய்தல் பற்றி நோய் நீங்கியதும் இன்பம் எய்தியதாக உபசரித்து வழங்கப்படடும். இனி வைகைக் கரையில் மெய்ஞ்ஞானோபதேசம் எய்தி என இறந்த காலத்தாற் கூறினார் எனினுமாம். |
| விடய நுகர்ச்சியில் புத்தியின்கண் வந்தவற்றை அழுந்தியறியுந் தன்வேதனைக் காட்சியின்பமே சிற்றின்பம், அருண்ஞானத்தால் தன்வேதனைக் காட்சியில் சிவத்துவ விளக்கத்தை அழுந்தியறிதலே பேரின்பம் என்பது பாடியத்தும் விளக்கப்பட்டுள்ளது. |
| உச்சிமேல் அங்கை கூப்பி - முன்னர் நோய் மிகுதியினாலே மெய்ம்முயற்சியின் வலிமையின்மையாற் "சிந்தையாற் றொழுதமை" (2667) போலன்றிச், சிரமேற் கைகூப்பினான் என்பது கருத்து. |
| மானம் ஒன்று இல்லார் - ஒன்று - ஒன்றும் - ஒரு சிறிதும்; முற்றும்மை தொக்கது; மானமில்லாமையாவது தீவினையஞ்சாமையாகிய தறுகண்மை; இல்லார் முன்பு - மானமிலா அமணர் காண அவர் முன்னே; வாதினில் ஏற்று நின்ற அவர்கள் முன்பு என்பதாம்; "உரிஞ்சாய வாழ்க்கையமண்....இருஞ்சாக்கியர்க ளெடுத் துரைப்ப" (தேவா - மயிலை-10) என்புழிப்போல. |