| யானை மீனவன் - யானைப் படையையுடைய பாண்டியன் என்றலுமாம். யானை போல என்றது மெய்யும் வினையும் பற்றிவந்த உவமம். கந்துசீறுதல் - முன்தன்னைக் கட்டுப்படுத்தியிருந்த தறியினை முறித்து நீங்கித் தன் வயத்ததாகுதல். |
| மற்று - மாறுபட்ட; உண்மை தெரிந்தும் நேர்மை திறம்பிய; நீசர் என்றது இக்கருத்துக் கொண்டது. |
| முந்தை மந்திரத்து விஞ்சை - முன்னர்க் கைக்கொண்ட மந்திரமும் அதுவாயிலாகக் கொண்ட விஞ்சையும்; "விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்"(2586); "தங்கண் மந்திரத்தாற் செந்தீ - திருமடஞ் சேரச்செய்தார்"(2595). |
| முற்றும் எஞ்ச - முழுதும் செயலற்றுத் தவிர்ந்துபோக; ஒழிய; எஞ்சுதல் - குறைவுபட்டொழிதல். |
| கைவரும் திறம் - வெற்றி கைகூடும் உபாயம்; தேடுவார் - என்பது பாடமாயின. தேடுதல் - ஆராய்தல் என்க. |
| வந்தவாய்மை - என்பதும் பாடம். |
| 773 |
| 2672. (வி-ரை) மாலையால் வெப்பொழிந்த தன்மை கண்டு சொல்லின் வென்றி அறிந்தனம் - என்க. பதிகத்தினால் வெப்புத் தீர்ந்த செய்கை காட்சியளவையால் அறிந்தோம்; ஆதலின் அத்துணைகொண்டு பிள்ளையாரது சொல்லே வெற்றி பெறுவது என்பது தெளிய அறிந்தோம். மன்னன் என்னாது கைதவன் என்றது அரசன் தங்கள் சார்பை விட்டகன்றமை கண்டு தம் மனத்துள் எழுந்த மனக்கசப்பை உணர்த்திய குறிப்பு. |
| மெய் தெரிந்த தர்க்கவாதம் வெல்லலாவதன்று - உண்மை தெரியநின்ற தர்க்க மூலமாக நிகழும் வாதம் நம்மால் வெல்லத்தக்கதன்று; மெய் - சமய உண்மையும் தெய்வத்தன்மை நிலையும்; தர்க்க வாதம் - சொல்லினால் வாதித்து நிலைநாட்டுதல். |
| வேறுஎய்து தீயில் நீரில் வெல்வது - வேறு - இதனின் வேறாகிய உபாயமாகிய; வேறாக; எய்து - பொருந்தும் ஆற்றால் வரும்; |
| தீயில் நீரில் வெல்வதென்றது - தீயும் நீரும் சடப்பொருள்களானமையால் அவற்றின் சடசத்தியைத் தமது மந்திரங்களின் - அதிதெய்வங்களின் - சிற்சத்தியால் கட்டுப்படுத்தலாம் என்பது அவர் கொண்ட கருத்து; தீயில் நீரில் - தீ ஒன்றிலே வெற்றி பெறுவதில் ஐயப்பட்டார்களாதலின் நீரையும் அப்போதே உடன் எண்ணினார்; என்னை? முன்னர்ப் பிள்ளையார்மாட்டுத் தாம் விஞ்சை மந்திரத்தொழில் விளைத்து ஏவிய தீ ஏவியபடி செல்லாமை கண்டாராதலின் ஐயம் கொள்ள நேர்ந்தது. ஆயின் அவ்வாறு அறிந்த பின்னரும் தீயினை எண்ணவந்ததென்னையோ? எனின், இங்குப் பிள்ளையார்மாட்டுச் செலுத்தப் பெறாது தம் அளவில் மந்திர சக்தியுள் சடசக்தி அடங்குதலைக் காட்டும் அளவுக்கு வேண்டப்படுதலால் அமையும் என்ற கருத்தாலும், முன்னர்த் தமது ஏவலுக்குள் அமையாது நின்ற தீ பிள்ளையார் பணித்தபடி அமைந்து வெப்பு என்ற உருவுடன் பாண்டியனை அடைந்தது என்ற உண்மை துணியப்பெறாமையாலும் என்க; "போன கங்குலிற் புகுந்ததன் விளைவுகொல்?"(2612) என்றது வினைப்பயனோ? என்ற ஐயப்பாடேயன்றிப் பிள்ளையாரது செயலென்ற துணிபின்மை காண்க; அவ்வாறு அறிந்தும் அறிவுபெற் றமையாது மேற்செல்லும் அமணரது மானமின்மை கண்டுகொள்க. |
| வெல்வது - வெற்றிபெற முயலத் தக்கது; |
| வெப்பொழித்த தன்மை கண்டறிந்தபின் - என்பதும் பாடம் |
| 774 |