| 2682. (வி-ரை) திருநாள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டினைக் கைக்கொண்டருளி, அதனில் உதயமாகித் திருவருட்குறிப்பினை உணர்த்தி நின்ற "போகமார்த்த பூண்முலையாள்...அண்ணல் பரமேட்டி" என்ற கருத்தினை உட்கொண்டு அதனைத் திருவுளங்கொண்டு துதித்து வணங்கி, எரியினிலிடும்போது பிள்ளையார் அருளிய "தளிரிள வளரொளி" என்ற பதிகத்தின் குறிப்பும் கருத்தும் உரைப்பது இத்திருப் பாட்டு. |
| நன்மை...எடுத்தே - "போகமார்த்த என்னும் பதிகத்துக்குரிய திருநள்ளாற்று நாதர் நன்மையைத் தருவார் என்று, கையிற் கொண்ட அவ்வேட்டை எடுத்து" என்பது இராமநாதச் செட்டியா ருரைக்குறிப்பு; இப்பொருளில் நாதன் நன்மையுய்க்கும் என்று கூட்டி உய்க்கும் என்பதனை வினைமுற்றாக்கி உரைத்தனர். |
| என்னை ஆளுடை ஈசன்றன் நாமமே என்றும் மன்னும் மெய்ப்பொருளாம் - அவரே என்னை ஆளாக உடைய இறைவர்; அவர் நாமமே மெய்ப்பொருள்; அத்திருநாமமே இவ்வேட்டினில் எழுதியுள்ளது. |
| நன்மையுய்க்கும் - "நற்றிறமுறு" (11) என்ற பதிகம் காண்க. |
| மெய்ப்பொருளாம் எனக் காட்டிட வன்னிதன்னில் ஆக என - இவ்வாறு அந்நாமமே மெய்ப்பொருள் என்பதை "மன்னுதம் பொருட்கருத்தின் வாய்மை - தீயின் வேவுறாமையாற் காட்டுக" என்று ஒட்டிய அமணர்க்குக் காட்டவேண்டில் இது வன்னியில் வேவாதிருத்தல் வேண்டும்; அவ்வண்ணமே ஆக என்று கருதி ஆணையிட்டு; "நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே - எரியிடிலிவைபழுதிலை - மெய்ம்மையே"(1) என்று பதிகப் பாட்டுத்தோறும் நள்ளாறரது (பதிகத்து நாதன்) நாமமே எரியில் இட்டால் பழுதில்லையாம்; இது மெய்ம்மை; (சத்தியமாகலான்) நிலைபெற்ற சத்துப் பொருளாகலான் - என்று ஆணையிட்டு அருளுதல் காண்க. |
| பதிகத்து நாதன் - "நள்ளாறர்"(பதிகம்); நாமமே - "நள்ளாறர்த நாமமே"(பதிகம்); என்றும் மன்னும் மெய்ப்பொருள் - "மெய்ம்மையே" (பதிகம்); "மன்னும் தம்பொருட் கருத்து வாய்மை"(2675); வன்னி தன்னிலாக - "எரியினி லிடிலிவை பழுதிலை"(பதிகம்). |
| "தளிரிள வளர்ஒளி" பாடி - தளிரிள வளரொளி என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி; முதற் குறிப்பால் வந்த ஆகுபெயர்; இது சரித வரலாற்றின் இப்பதிகத்துக்குப் பேராதரவாகிய அகச்சான்று; பிள்ளையார் செய்த சமண வாதம் பற்றிப் பலபடப் பிறழ்வுணர்ச்சி கொண்டு ஆராயும் ஆராய்ச்சியாளர் இதனையும் மேல் இதுபற்றிக் கூறுவனவற்றையும் சிந்தித்துத் தமது தவறுகளை உணர்வார்களாக. பதிகக் குறிப்புக்கள் பார்க்க. |
| பாடத் - தீயினில் - இட்டார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. பாடி இடுதல் என்னை? எனின்: "அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்"(544); "அண்ணலா ரஞ்செழுத் தோதிப், பாற்ற டம்புனற் பொய்கையின் மூழ்கினார் பணியால்"(1635) என்றமையும் ஆண்டுரைத்த வையும் கருதுக. ஒருபெருவாதத்தில் ஒட்டிப் புகுகின்றாராதலின் புகும்போது சிவநாம மோதிப்புகுதல் உயர்ந்தோர் மரபும் முறையுமாம்; ஆயின் ஈண்டுத் திருவைந்தெழுத்தை ஓதாததென்னையோ? எனின், "அஞ்செழுத்தி னாமத்தான்காண்" என்றபடி சீபஞ்சாக்கரமும் சிவநாமமேயாம். இங்குப் பிள்ளையார் போற்றிப் புகுந்தது நாமமேயாம் என்றது கண்டுகொள்க. சிவநாமம் பொதுவினிற் போற்றாது நள்ளாறர் நாமம் போற்றியது உதயமான நலம்பயக்கும் பதிகத்தினாதன் என்றதனாலும் அதுவே தம்மையாளுடை ஈசன்றன் நாமமே என்றதனாலுமாம். |