| இங்குச் "சிவநாமமே என்றும் நிலையான மெய்ப்பொருளாகு மென்பதைச் சமணருக்குங் காட்டும்படி இவை அக்கினியி லிடப்படுமாயின் பழுது இல்லை;! இது சத்தியமென்னுங் கருத்தையுடைய தளிரிள வளரொளி என்னும் பதிகத்தைப் பாடி வன்னியிற் புகுதுக என்று கூற" என்பது இராமநாதச் செட்டியா ருரைக்குறிப்பு. இவ்வாறன்றி, என்றெடுத்தும் எனப் பாடங்கொண்டு, என்று எடுத்தும், - நாமமே என்று கூறியும் - பாடி என்று உரைகொள்வர் ஆறுமுகத் தம்பிரானார். |
| 784 |
| 2683. (வி-ரை) செய்யதாமரை...சிவந்த - செய்யதாமரை - செந்தாமரை; செந்தாமரைப் புறவிதழும் சிவப்புநிற மிக்கன; அதன் அகவிதழ் அவற்றினும் மிகச் சிவப்புடையன. |
| மிகச்சிவந்த - பிள்ளையார் திருக்கைகள் அவ் வகவிதழினும் மிகச் சிவந்தன; என்று இவ்வாறு சிவப்பு ஒன்றற்கொன் றேற்றமாக் கூறியது உவமைநயம்; இங்கு நிறம் ஒன்றேபற்றிக் கூறினாரேனும் இனம்பற்றி மென்மைப் பண்பும் மெய்யும் உருவும்பற்றியும் உவமை பொருந்தக் கொள்க; சைவ மெய்த் திருவாகிய திருநீற்றினை வழங்கிய நிலையினால் பயன்பற்றியும் உவமங் குறிக்கொள்க. |
| கையில் - கையில் கொண்ட. "கைத்தலத்திடைக் கொண்டனர்" (2681). |
| கைதவன் பேரவை காண - "திருந்தவை முன்னர்த் தழலமைக் கென" அரசன் ஏவின்மையால்(2677) அந்தப் பேரவை முழுதும் காணும்படி என்க. |
| தீயினில் - இட்டார் என்று கூட்டுக; சிந்தை வேகலாவது - தீ வாதில் வரும் தோல்வியினால் அவர்களது சிந்தை கரிந்தொழிய. ஆகஎன என்பது பாவனை; பாடி - என்பது மந்திரம்; இட்டார் என்பது கிரியை - என மூன்றும் கொள்க. |
| வையம் உய்ந்திட - உண்மைத் தெய்வத்தன்மையின் நிலை கண்டுணர்ந்து, உலகம் உய்ய வந்தவர் - அவதரித்தவர்; பாண்டிநாடுய்ய அதனால் உலகுய்ய அந்நாட்டில் எழுந்தருளி வந்தவர் என்ற குறிப்புமாம். |
| மகிழ்ந்து - நள்ளாறர்தம் நாமமே, எரியில் பழுதுபடாது மெய்ம்மை யிதுவென்று காட்டி உலகுக்குப் போகம் கொடுக்கும் என்றுணர்ந்து கொண்டாராதலின் மகிழ்ந்தனர்; அமணர் இவ்வாறன்றிக் கவலையாம் உணர்வினால், நையுநெஞ்சினராகியே நடுங்கி நின்றிட்டார் (2685) என்பது காண்க; தெய்வத்தன்மை யின்றிக் கற்பித்துப் புனைந்த பொய்யும் வஞ்சனையுமாதலின் அவர் நடுங்கினர் என்க. |
| முன் - அமணர் இடுவதற்கு முன்பு; பொருணிலையின் வாய்மை பெற்றுடை யாராதலின் மகிழ்தலும், அவரின் முன்னரே இடுதலும் ஆயிற்று. |
| 785 |
| திருநள்ளாறு |
| திருச்சிற்றம்பலம் திருவிராகம் - பண் - சாதாரி |
| தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின் நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை; மெய்ம்மையே. | |
| (1) |
| சிற்றிடை யரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தூயரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |