[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்959

  குறிப்பு:- இப்பதிகம் மதுரையில் அரசன் எதிரில் வேறு தலமாகிய திருநள்ளாற்றினைப் பற்றிப் பாடிய பதிகம். முன்பிரமபுரத்தைப் பாடியதும் பின்னரும் பாடுவதும்போலவும் காண்க; "நள்ளாறுடைய ஈசனே - ஆலவாயின்கண் வந்தமர்ந்த வாறென்கொல் சொல்லாய்" என்ற கருத்துடன் பின்னர் திருநள்ளாற்றில் அருளும் வினாவுரை - திருநள்ளாறும் திருவாலவாயும் - என்ற (நட்டபாடை) பதிகத்தாலும் சரித வரலாற்றின் இப்பகுதி அகச்சான்றுடன் உறுதி பெறுதல் காண்க.
2684
இட்ட வேட்டினி லெழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்
தட்ட மூர்த்தியைப் பொருளென உடைமையா லமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கிய தன்றே.
 

786

   (இ-ள்) இட்ட...பதிகம் - மேற்கூறியவாறு பிள்ளையார் தமது கையினால் தீயிடை இட்ட ஏட்டிலே எழுதப்பட்ட திருநள்ளாற்றைப் போற்றும் செந்தமிழ்த் திருப்பதிகம்; மட்டுஉலாம்...உடைமையால் - மணம் வீசுகின்ற கூந்தலையும் அழகிய முலைகளையுமுடைய மலைமகளாராகிய உமையம்மையாரை ஒருபாகத்திற் கொண்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானையே பொருளாகக் கொண் டுடைமையாலே; அமர்ந்து பட்ட - பொருந்திக் கிடந்த; தீயிடை..அன்றே - தீயினிடையே வேவா திருந்ததனுடனே பச்சையாயும் அப்பொழுதே விளங்கிற்று.
  (வி-ரை) பதிகக் குறிப்பைக் காட்டி, அது திருவருட் குறிப்புடன் பொருந்தியமையால் ஏடு வேவாமைக்குரிய காரணத்தை ஆசிரியர் எடுத்துபதேசித்தபடி.
  இட்ட ஏடு - பிள்ளையார் தீயினில் இட்ட ஏடு.
  பதிகம் - அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் - பதிகம் - சொல்; அட்டமூர்த்தி அதனாற் குறிக்கப்படும் பொருள்; "பதிகத்தின் நாதன்"; "ஈசன்றன் நாமமே"(2682) என்றவையும் இக்கருத்து; பொருளினை உட்கொண்டமையாற் சொல்லும், அதனை மேற்கொண்டதனால் அது எழுதப்பட்ட ஏடும் அத்தன்மைப்பட்டு வேவாதிருந்தன என்பது.
  அட்டமூர்த்தி - "நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்" (திருவா. தோணோ - 5) மண் - நீர் - தீ - காற்று - வான் என்ற ஐம்பூதங்களும் ஞாயிறு - மதி - உயிர் என்ற மூன்றும் ஆக எட்டும் இறைவரது திருமேனி என்ப. ("புலனாய மைந்தன்" என்றதனால் ஏனைய ஏழும் அசித்து என்றபடி.)
  அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் - பச்சையாய் விளங்கியது - என்றதென்னை? எனின் கூறுதும்: முன்கூறியபடி எட்டு மூர்த்தங்களுள் எரி - தீயும் ஒன்று; மூர்த்தம் - மூர்த்தி - என்பது உடல்; அவ்வுடலுள் உயிராய் இருப்பவன் மூர்த்திமான்; உயிரையன்றி உடலுக்குச் செயலில்லை; உடல் தனித்தியங்காது; அரசன்முன் அமைத்த எரி உடலும், அதனுள் இட்ட ஏடு அவ்வெரியுள்ளிட்ட எட்டினையும் உடலாக்கொண்ட மூர்த்திமானாகிய உயிர். ஆதலின் உடலினுள் உயிர் பொருந்தியவாறு இவ்வேடு அமர்ந்துபட்டுப் பச்சையாய் விளங்கியது. இடல் உயிரை அழிக்கமாட்டாதன்றோ? ஆனால் ஏடு இடுவதன் முன்னரும் எரியாகிய உடல் அவ்வுயிரை இன்றியமையாமல் உட்கொண்டிருந்த தன்றோ? எனின், அஃதொக்கும், முன்னரும் அத்தீ உயிருடன்தானிருந்தது. இறைவனது நிறைவு யாண்டுமுள்ளதன்றோ? ஆயின் பின்னர்ப் பதிகம் எழுதிய ஏடு, அத்தீயாகிய ஒருடம்பு அளவின்மட்டிலன்றி