[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்961

  ஆயின் ஈண்டுத் தீயிற் பழுதுபடாது நிற்கும் வாய்மையின் வலிமையினை அவ்வேட்டினில் எங்ஙனம் கண்டு கொண் டருளினார் எனின், ஏட்டினைக் கண்டனர்; அதனுள் "பூண்முலையாள் பாகமுடைய பரமேட்டி" - என்ற சொற்றொகுதி கண்டனர்; அதனுள் அதன் பொருளாகிய நள்ளாறனையும், அவன் அருள்முலையாளொடு குலவலின் அட்ட மூர்த்தமாகிய உடம்புடையான் என்பதனையுமே கண்டனர்; அவ்வேட்டினை அவ்வாறே கருதுதல் (பாவனை); அழுந்தியறிதல் (தியானம்); ஆணையிடுதல் (மந்திரம்) என்ற செயல்களை அவ்வண்ணமாக்கினர்; "முலையொடு குலவலின்" என்றது பாவனை; "நாமமே" "மெய்ம்மையே" என்பன தியானம்; "எரியிடிலிவை பழுதிலை" என்பது ஆணையாகிய மந்திரம். என்னை? "நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப"(தொல்). அவ்வேட்டினை எடுத்து இவ்வாறு அருளுருவாக்கிக் கொண்டதனால் அவ்வேடு அத்தன்மையே பெற்றதென்க. "கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தி லங்கிவே, றுண்டல்போ னின்றங் குளதாமாற் - கண்டவுருத், தானது வா யன்றானான் றானதுவாய்த் தோன்றானோ, தானது வாய்க் காணுந் தவர்க்கு" (12 - 3 - அதி - வெண்பா) என்று தாபரத்தின்கட் சிவ வழிபாடு செய்க என விதிக்கும் சிவஞானபோத உண்மை ஈண்டுச் சிந்தித்துணரற் பாலது; இவ்வாற்றாற் சிவம் வெளிப்பட்டமையால் அவ்வேடு சிவனுருவாகிய எரியிடை அமைந்து பட்டதென்க. "மரத்தை மறைத்தது மாமத யானை.....பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே"(திருமந் - 8 - பராவத்தை - 23) என்றபடி இங்கு நள்ளாறர் நாமமேயாகிய பொருளியல்பே வெளிப்பட்டு, எழுத்தாகிய சொல்லும் ஏடும் தோற்றப்படாது நின்றன.
  மட்டுஉலாம் குழல் - இயற்கையாகிய மணத்தையுடைய குழல்.
  பட்ட தீயிடை என்று வேறு பிரித்து, வளர்க்கப்பட்ட என்றுரைப்பாருமுண்டு. அன்றே - அசையென் றொதுக்குவாருமுண்டு.
  இனி, இப்பாட்டிற்கு மேற்கூறியவாறன்றி, "எரி அட்டமூர்த்தங்களுள் ஒன்று. அவ்வெரி ஆண்டவனுருவம்; இவ்வுண்மையை அநுபூதியில் உணர்ந்து திருவருள் ஞானம் பெற்ற பெரியாரின் திருவாக்கைக் கொண்ட திருப்பதிகம் எங்ஙனம் அழிந்து படும்?" என்று கருத்துரை கொள்வாருமுண்டு; அருள்ஞானம் பெற்ற பெரியாரின் திருவாக்கு என்பது பிள்ளையாரது எல்லாப் பதிகங்களுக்கும் ஒக்கும்; அதனால் இப்பதிகத்திகற்குச் சிறப்பியல்வு ஒன்றுமில்லை. ஈண்டு எரியில் பழுதில்லாதிருந்தது பிள்ளையார் திருவாக்கு என்பதனாலன்று; "மலைமகள் முலையிணை குலவலின்" - "அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால்" - என்று பிள்ளையார்தாமும் ஆசிரியரும் உணர்த்தியருளினமை கொண்டும், இவ்வாற்றானும், பிறவாற்றானும் இக்கருத்துரை பொருந்தாமை கண்டு கொள்க.
  இனி, ஈண்டு இத்திருப்பாட்டின் கீழ், விசேட ஆராய்ச்சியுரை எனப்பட்டுத் திரிபுணர்ச்சியானும் ஒருசார்புணர்ச்சியானும், உண்மைநூலின் நுட்பவுணர்ச்சி பெறாமையானும், வேண்டப்படாதனவும், சைவசித்தாந்தத்திற்கு முரண்பாடாயினவும், மயங்க வைப்பனவுமாகிய பல பொருள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொருத்தமற்ற ஆரவார நீர்மையவாகிய வெற்றுரைகளே என்று வேறு ஒதுக்கத்தக்கனவே யாயினும், சைவநூல்களின் உண்மைத் திறத்தின் அநுபவமில்லாதாரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில கூறுதல் தகுதியாகும்: அவர் கூற்றாவன:-- "உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்தும் ஒருவர் குரு எனப்படுவர் - திருஞான சம்பந்தர்