| அவ்வாறு செய்தருளவுற்ற திருவருட் குறிப்பு எம்மா லறியும்தரமன்று; "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமு மாதிமாண்பும், கேட்பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" என்பது ஆணை; ஆயினும் ஒன்று கருத உள்ளதனை ஈண்டு அச்சத்துடன் குறிக்க நினைக்கின்றேன்: முன் செய்த சுரந்தீர்த்த செயல் சமயஉண்மை காட்ட ஒட்டிச் செய்த வாதமன்று; அரசன் நோயின் மிகுதியால் "நீங்கள் தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர்" (2657); "இகலித் தீரும்"(2659) என்று கூறிய அளவிலன்றிப் பிள்ளையார் "பேசுதிர் நும்பொருள் எல்லை" என்று வாதத்தில் அழைக்க, அமணர் வாய்மை ஏடு நெருப்பில் வேவுறாமை வெற்றியாகும்; அது கட்புலத்திலுய்ப் பது என்று ஒட்டினாராக, அதன்படி துணிந்து வாய்மை நிலைநாட்ட எழுந்தது இவ்வாதமாதலின் தாமாத் துணிந்து செய்தலின்றி இறைவரருட் குறிப்பினையே கைக்கொண்டு செய்தல் தகுமென்பது பிள்ளையாரது திருவுள்ளக்கிடைபோலும் என்பது கருதப்படுவதாம்; பின்னர்ப் புனல் வாதத்தில், இவ்வாறு முன்னர்த் தீயினில் நிலைகண்ட வாய்மையினைப் பாண்டியனுக்குத் தேற்றி ஞானோபதேசம் செய்த ஆட்கொள்ளும் வகையாற் றிருப்பாசுரம் பாடப்பட்டதென்பதும் கருதப்படும். |
| எய்திய செந்தமிழ்ப் பதிகம் - என்பதும் பாடம். |
| 786 |
2685 | மைய னெஞ்சுடை யமணருந் தம்பொருள் வரைந்த கையி லேட்டினைக் கதுவுசெந் தீயினி லிடுவார் ‘உய்யு மோவிது?’ வெனவுறுங் கவலையா முணர்வால் நையு நெஞ்சின ராகியே நடுங்கிநின் றிட்டார். | |
| 787 |
| (இ-ள்) மையல்....இடுவார் - மயக்கத்தைக் கொண்ட மனமுடை யவர்களாகிய அமணர்களும் தமது சமய உண்மைப் பொருளை எழுதிய தமது கையிற்கொண்ட ஏட்டினை வெப்ப மிக்குக் காய்கின்ற தீயிலே இடவார்களாகி; "உண்ணுமோ இது?"....உணர்வால் - இது தீயினில் வேவாது எஞ்சுமோ என்று பொருந்திய கவலை கொண்ட வுணர்வினாலே; நையும்...இட்டார் - அழிகின்ற உள்ளத்தினை யுடையவர்களாகியே நடுங்கிநின்று தீயினிடை இட்டனர். |
| (வி-ரை) நடுங்கி நின்று இட்டார் - பிள்ளையார் மகிழ்ந்து முன் இட்டார் 2683); அதுபோலன்றி அமணர் திருவருள் வலிமை பெறாமையினால் நடுக்கமுடன் இட்டார்கள். |
| மையல் - மயக்கம்; பொய்யை மெய்யாக்கிக்கொள்ளும் மாறுபாடு; இஃது அவர்க்குச் சமயக் கோட்பாடு பற்றிய இயல்பால் வந்தது; கவலை - ஈண்டு ஏடு உய்யுமோ - உய்திபெறாது தீர்ந்து சமயத்தை இழுக்கிவிடுமோ என்ற பயத்தால் அப்போது வந்த மனநிலை; நையும் நெஞ்சம் - நைதல்; கவலையால் நேரும் மன அழிவு: நடுக்கம் - அதனால் வரும் மெய்ப்பாடு. |
| தம்பொருள் - தமது சமய உண்மைப் பொருட் கருத்தின் வாய்மை(2675); வரைந்த ஏடு - கையில் ஏடு என்று தனித்தனிக் கூட்டுக. |
| கதுவுதல் - சுட்டு அழித்தல்; அடுதல்; இங்குக் கதுவு செந்தீ எனவும், முன்னர்ப் பிள்ளையார் இட்ட போது அமர்ந்துபட்ட தீ (2684) என்றும் கூறியவை சரிதவிளைவுக் குறிப்புப்பட வைத்த அமைதி காண்க. |
| நடுங்கி - தமது அச்சம் - கவலைகளை மறைத்தாராயினும் மனமழிவு மிகுதலின் மெய்ந்நடுக்கமாகிய புறச்செயல் வெளிப்பாடு பெற்றது என்க. |
| 787 |