2686 | அஞ்சு முள்ளத்த ராகியு மறிவிலா வமணர் வெஞ்சு டர்ப்பெருந் தீயினில் விழுத்திய வேடு பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார். | |
| 788 |
| (இ-ள்) அஞ்சும்...அமணர் - பயங்கொண்ட மனதையுடைய ராயினும் அதனால் அறிவு பெறாத அமணர்கள்; வெஞ்சுடர்...ஏடு - வெவ்விய சுடரினையுடைய, தீயிலே வீழ்த்திய ஏடு; பஞ்சு..படக்கண்டு - தீயினிலே பஞ்சு வீழ்ந்தால் பட்டொழிவதுபோல ஒழிந்துபட்டது கண்டு; பயத்தால்....நின்றார் - பயத்தினாலே மனம் சோர்வடைந்த பின்னும் கையில் ஏந்திய மயிற்பீலிக் கற்றையைக் கைசோர விடாதவராகி நின்றனர். |
| (வி-ரை) அஞ்சும்...அறிவிலா - தமது சமய உண்மைகளும் தமது புனைவுகளும் வெற்றி பெறா என்று கண்டு அஞ்சினார்கள்; ஆனால் அவ்வச்சத்தினின்று தெளிய வேண்டிய அறிவினைப் பெறாதொழிந்தனர். |
| விழுத்திய ஏடு - அச்சங் காரணமாக ஏட்டினை வீழும்படி செய்தனரேயன்றி ஒழுங்குபெறப் புகுதவிடமாட்டாத நிலை என்பது குறிப்பு. |
| பஞ்சு தீயிடைப்பட்டது பட-பட்டது - பட்டதுபோன்ற அழிந்த நிலை; பட்டது - பெயர்; ஆகுபெயராய்ப் பட்ட நிலையைக் குறித்தது; இரண்டனுருபு விரிக்க; படுதல் - பெறுதல்; அழிதல் என்றலுமாம்; இப்பொருட்குப் பட்டது போலப் பட என உவம வுருபு விரிக்க. |
| பயத்தால் நெஞ்சு சோர - ஏட்டினைத் தீயில் இடும் முன்னர் உய்யுமோ என்ற ஐயப்பாட்டின் கவலையினால் அச்சம் மட்டும் இருந்தது. இப்போது அவ்வேடு உய்யாது ஒழிந்தமை கண்டு கொண்டாராதலின் பயம் மிகுதியினால் மனம் சோர்ந்துபட்டது; பயம் - மிக்க அச்சம்; இது வேவுறாமை வெற்றியென்றும், வெந்துபட்டது வாய்மையன்று என்றும் ஒட்டினாராதலின் தோல்வி வந்தமையும் அதனால் அரசனிடம் தொடர்பு பற்றிய பயன்களெல்லாவற்றின் இழப்பும், நிலையழிவும் நேர்வதனையும் எண்ணியதனால் உண்டாகியது; பயம் - இதன் விளைவு என்றலுமாம். |
| நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் - பீலி - சமயக்குறி; மனஞ் சோர்வுபடினும் தறுகண்மையால் அதனை மறைத்துப் பீலியைக் கைவிடாது நின்றார்; உண்மை கண்டபோதும் பொய்பட்ட தமது சமயக் கொள்கையை விடாது பற்றிக்கொண்டு என்றதும் குறிப்பு. சோர்ந்திலர் - சோர்ந்திலராகி முற்றெச்சம்; முற்றாக உரைப்பினுமிழுக்காது. |
| நின்றார் - தோல்வியை ஒப்பித் தாழாமலும் அகலாமலும் நின்றனர். |
| பஞ்சுதீயினில் - என்பதும் பாடம். |
| 788 |
2687 | மான மன்னவ னவையின்முன் வளர்த்தசெந் தீயின் ஞான முண்டவ ரிட்டவே டிசைத்தநா ழிகையில் ஈன மின்மைகண் டியாவரும் வியப்புற வெடுத்தார் பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப. | |
| 789 |
| (இ-ள்) மானமன்னவன்....ஏடு - ஞானபோனகராகிய பிள்ளையார், பெருமையுடைய பாண்டியனது சபையின்முன் வளர்க்கப்பட்ட தீயிலே இட்ட ஏடு; இசைத்த...கண்டு - குறிப்பிட்ட நாழிகையளவில் அழிவுபெறாமல் நின்றதனைக் கண்டு; பான்மை...பயப்ப - |