| என்பன முதுமொழி யாதலின் ஈண்டுப் பொறாமையினால் தங்கள் கேட்டினைத் தாமே தேடி வரவழைத்துக் கொண்டனர் என்பதாம். இங்ஙனமாகவும் சமணர் கழுவேறிய செயலின்காரணத்தை அமைச்சர் பாலதாகவோ, அன்றிப் பிள்ளையார் பாலதாகவோ சுமத்திப் பழிசாற்றுதல் எத்துணைப் பெருந்தவறு! என்பதறியலாம். இவ்வாதம் ஒட்டிச் செய்வது என்று அமைச்சர் அறுதியிட்டனரே யன்றி இன்னபடி என்று வகுத்தாரிலர். தண்டியடிகள்பால் "நாங்கள் இவ்வூரிலிருக்கிலோம்" என்று ஒட்டிய இவர்களது சகோதர சமணர்கள் போலவே இவர்களும் தாமே ஒட்டினர் என்க. |
| தனி...வேந்தனே என்று சொன்னார் - தனி வாது - இனி ஒன்று என்று வேண்டிப் பெற்ற இவ்வோர் வாதம்; தனி - ஒப்பற்ற என்றலுமாம்; வேந்தனே ஏற்று வான் - வேந்தன் எங்களை இவ்வாறு முறை செய்வானாக; அதற்கு நாங்கள் இசைகின்றோம் என்று ஒட்டினார். இசைவு தங்கள் பாலதாகவும் அதனை இயற்றுதல்மட்டில் அரசன் பாலதாகவும் வைத்துக் கூறியது காண்க; தாமே - தம் பொறுப்பாகவே. |
| 798 |
2697 | மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலு மலய மன்னன் "செற்றத்தா லுரைத்தீ; ருங்கள் செய்கையு மறந்தீ" ரென்று, "பற்றிய பொருளி னேடு படர்புனல் வைகை யாற்றிற் பொற்புற விடுவ தற்குப் போதுவ" தென்று கூற, | |
| 799 |
2698 | பிள்ளையார் முன்னம் பைம்பொற் பீடத்தி னிழிந்து போந்து தெள்ளுநீர்த் தரளப் பத்திச் சிவிகைமே லேறிச் சென்றார்; வள்ளலா ரவர்தம் பின்பு மன்னன்மா வேறிச் சென்றான்; உள்ளவா றுணர்கி லாதா ருணர்வுமா லேறிச் சென்றார். | |
| 800 |
| 2697. (இ-ள்) மற்றவர்...மன்னன் - மற்ற அவ்வமணர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டதும் பொதிகைமலைக்கு அரசனான பாண்டியன்; செற்றத்தால்....என்று - நீங்கள் வெகுளி மிகுதியினால் இவ்வாறு சொல்லிவிட்டீர்கள்; உங்கள் செய்கைகளையும் மறந்து விட்டீர்கள் என்று கூறி; பற்றிய....கூற - உண்மைபற்றிய பொருளை உட்கொண்ட நுந்தம் ஓலைகளை ஓடும் நீரினையுடைய வைகையாற்றில் அழகு பொருந்த விடுவதற்குச் செல்லுங்கள் என்று சொல்ல, |
| 799 |
| 2698. (இ-ள்) பிள்ளையார்....சிவிகைமேல் ஏறிச் சென்றார் - பிள்ளையார் பசும்பொன்னாலியன்ற பீடத்தினின்றும் முன்னம் எழுந்து வெளியிற் போந்து தெளிந்த நீர்மையுடைய முத்து வரிசைகளையுடைய சிவிகையின்மேல் ஏறிச்சென்றருளினர்; வள்ளலார்...மா ஏறிச் சென்றான் - வள்ளலாராகிய அவர் பின்பு அரசன் குதிரையின்மேல் ஏறிச் சென்றார்; உள்ளவாறு....மாலேறிச் சென்றார் - உண்மையினை உள்ளபடி உணர்ந்தொழுகும் ஆற்றலில்லாதவர்களாகிய அமணர்கள் தம் உணர்வினில் மயக்கத்தினை மேற்கொண்டு சென்றனர். |
| 800 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2697. (வி-ரை) மலயமன்னன் - மலயம் - பொதிகை; இங்கு அந்த மலையினையுடைய பாண்டிய நாட்டைக் குறித்தது. |
| உங்கள் செய்கை - நீங்கள் முன்னே செய்த வஞ்சச் செயல்கள்; வஞ்சனை - பொய் - சூழ்ச்சி முதலிய தீமைகளில் மனமறிந்து நின்றமையால் அவற்றுள் உண்மை நிலை காண்பதெவ்வாறு என்றபடி; செய்கை - இவ்வாறு ஒட்டும் செயலால் மேல் வினைவு என்ன என்பதனை நினைக்க மறந்தீர் என்றலுமாம். |