| றும் திருமடத்திற் கெழுந்தருளும்போது கண்டோர் சிலரே; பின்னர் அன்றிரவு அமணரது தீச்செயலால் நோய்மூள அதன்பொருட்டுத் திருக்கோயிலுக்குச் சென்று பின் அரண்மனைக்குள் புகுந்தருளியபோது கண்டோரும் மற்றும் சிலரே; அப்போது சமணசமயம் மூண்டு மாந்தரை மயக்கிநின்ற திண்ணிய இருள்நிலை யாதலின் மாந்தர் பலராக் காண்பதும் பெரும்பொருளாகக் கருதுவதும் நிகழா; அன்று நோய் நீக்கிய நிலை பிள்ளையாரது அருளினால் திருநீற்றினால் நிகழ்ந்தது என்றும், அதன்மேல் அனலிற் பிள்ளையார் இட்ட ஏடு அழியாது நிலைபெற்றுச் சைவ மேன்மை சாற்றியது என்றும், இவ்விரண்டினும் அமணர் ஒட்டிக்கெட்டுத் தோல்வியுற்றனர் என்றும், அரசன் அவர்களை ஒதுக்கிய பின்னும் மூன்றாவது ஒருமுறை இறுதியாக ஏட்டினை நீரில் இட்டு உண்மை காணவும் இதிலும் தோல்வியுறின் கழுவேறுதற்கும் ஒட்டிப்போதருகின்றனர் என்றும் நிகழ்ந்த இச்செய்திகள் நகரம் முழுதும் கடுவேனிலிற் கடுங்காற்றிற் பரவும் காட்டுத் தீப்போலப் பரவிவிட்டமையின் இவ்வெழுச்சி காண மக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு கூடிவிட்டனர்; இவர்கள் முன்கூறியவாறு பிள்ளையாரது பெயரும் திருவுருவமும் கண்ட சிலர் காணாத பலருக்கும் அவரையும் அவர் பெருமைகளையும் அவரால் வெல்லப்பட்ட அமணரின் இழிவையும் பிறவற்றையும் அறிவுறுத்தும் இயல்பின் எழுவன இங்குக் கூறும் மொழிகள். மேல் ஆறு பாட்டுக்களினும் வருவனவும் இவ்வாறே இந்நிகழ்ச்சிகளின் பலபல பகுதிகளை எடுத்து மக்கள் தத்தமக்குத் தோன்றிய கருத்துக்களை எடுத்துக் கூறம் தன்மையும் காண்க. |
| முன்னர்க் கண்டவர் சிலராதலினாலும், சமண சமயக் கோட்பாட்டுட்பட்டு நின்ற நிலை நீங்காமையானும் "பண்ணிய தவங்கள் என்கொல் - புண்ணிய மூர்த்தி வந்து மதுரையிற் புகுத"(2642) என்றமட்டில் அமைந்த நிலையினை ஒரு பாட்டிற் கூறிய ஆசிரியர், இங்கு மாதர் மைந்தர் பலரும் துன்னிய பெருந்திரளாகக் கூடிக் கண்டு சைவ வெற்றிப்பாடும் சமணரது இழிவும் அழிவும் அறிந்துகொண்ட நிலையிற் கூறுவன பலவாதலின் அத்திறம்பட ஏழு பாட்டுக்களிற் பலபடப் புகழ்ந்து கூறும் அமைதியும் கவித் திறமும் காண்க. கூறும் பொருளும் ஏற்றம்பெற அமைத்தருளுதலும் காண்க. |
| மானசீர் - பெருஞ் சிறப்பு; "பாண்டி நாடே பழம்பதி யாகவும்", தென்பாண்டி நாடே தெளி" என்பனவாதி திருவாக்குக்களால் பேரருட் பெரியோர்களாற் போற்றப்படுதலும், இறைவர் எவ்வுயிர்க்கும் எளிவரும் பேரருளுடன் தேற்றம்பெற விளங்குதலுமாகிய சிறப்பு; பெருமக்களாற் போற்றப்படுதல் மானம் - பெருமை எனவும், இறைவர் எளிவரும் கருணை சீர் எனவும் கொள்க. "நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை மாந்தர் போற்றும், பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது"((968) என்று இத்தன்மை பற்றியே தொடக்கத்தில் ஆசிரியர் அறிவித்தருளியது காண்க. |
| தென்னன் நாடு - தென்னவனும் அவன் நாடும் என்ற குறிப்புமாம். நாடு வாழ - நாட்டினைக் கூறியது அவ்வாழ்வு தங்களுக்கு வருதலால் தாம் பெறும் நலம் பற்றி. "வாழ்ந்தன கண்கள்"(2701) என்பது முதலியவை காண்க. "மணங் கண்டு வாழ்ந்தோ மென்பார்"(171); "நல்லமங் கலங்கள் கூறி மனிதருந் தேவ ரானார் கண்ணிமை யாது வாழ்த்தி" (புரா - 1238) முதலியவை காண்க. |
| வந்து - தாமே வந்தருளி; இத்தனை சீர்கேடுகளுக்குமிடையே கருணையினால் வந்தருளி என்றதும் குறிப்பு. |
| 802 |
2701 | "எரியிடை வாதிற் றோற்ற திவர்க்குநம் மருக" ரென்பார்; "புரிசடை யண்ண னீறே பொருளெனக் கண்டோ" மென்பார்; | |