| "பெருகொளி முத்தின் பைம்பொற் சிவிகைமேற் பிள்ளை யார்தாம் வருமழ கென்னே" யென்பார்; "வாழ்ந்தன கண்க" ளென்பார்; | |
| 803 |
| (இ-ள்) "எரியிடை...அருகர்" என்பார் - தீயிற் செய்த வாதத்தில் நமது அமண குருமார் தோற்றது இவர்க்கு என்று சொல்வார்கள்; புரிசடை..கண்டோம் என்பார் - புரிசடையினையுடைய சிவபெருமானது திருநீறே மெய்ப்பொருளாவது என்பதனைக் கண்ணாரக் கண்டோம் என்று சொல்வார்கள்; பெருகு ஒளி....என்னே என்பார் - பெருகும் ஒளியினை யுடைய முத்து நிரைத்த பசும்பொன்னாலியன்ற சிவிகையின் மேலே பிள்ளையார்தாம் வருகின்ற அழகு தான் என்னே! என்று சொல்வார்கள்; வாழ்ந்தன கண்கள் என்பார் - அக்காட்சியைக் கண்டு நமது கண்கள் வாழ்வடைந்தன என்று சொல்வார்கள்; |
| (வி-ரை) தோற்றது - தோல்வியுற்ற செயல் நிகழ்ந்தது. இவர்க்கு - இவரால் - குவ்வுருபு கருத்தாப்பொருளில் வரும் மூன்றனுருபாக வந்தது. பகைப்பொருளில் வந்த நான்கனுருபாகவே கொள்ளினும் அமையும். |
| நம் அருகர் - இதுவரை மேம்பட்டு நமக்குக் குருமாராகி நின்றவர் என்ற உரிமை பற்றி நம் என்றார்கள். |
| நீறே பொருள் எனக் கண்டோம் - சுரவாதத்தால் நிச்சயமாகக் காட்டப்பட்ட உண்மையாதலின் இவ்வாறு கூறினார். பொருள் - மெய்ப்பொருள். |
| அழகு என்னே - என்னே - சொல்லவொண்ணாத அற்புதம் என்றபடி; |
| வாழ்ந்தன கண்கள் - வாழ்வாவது கண் பெற்ற பயன்பெறுதல்; "மண்ணெலா முய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு, கண்ணினாற் பயன்கொண்டார்கள் கன்னிநாட்டவர்க ளெல்லாம்" (2760) என்று மேல் இக்கருத்தை முற்றுவித்தல் காண்க. "கண்ணினாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்" உறுதிப்பொருள் இரண்டனு ளொன்றா மென்று காட்டும் பொருள் ஈண்டும் ஒக்கும் என்க; (அவர் - அடியார் எனக் கொள்ளலுமாம்) |
| 803 |
2702 | "ஏதமே விளைந்த திந்த வடிகண்மா ரியல்பா" லென்பார்; "நாதனு மால வாயி னம்பனே காணு" மென்பார்; "போதமா வதுவு முக்கட் புராணனை யறிவ" தென்பார்; "வேதமும் நீறு மாகி விடும்விடு மெங்கு" மென்பார்; | |
| 704 |
| (இ-ள்) ஏதமே....இயல்பாலென்பார் - இந்த அமண குருமாரின் இயல்பினாலே தீமையே விளைந்தது என்று சொல்வார்கள்; நாதனும்.... காணும் என்பார் - முழுமுதற் கடவுளாவார் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள நம்பனே என்று கண்டுகொள்ளுங்கள் என்று சொல்வார்கள்; போதமாவதுவும்...அறிவது என்பார் - முக்கண்ணுடைய பழமையாகிய சிவபெருமானையறிவதுவே ஞானமாவது என்று சொல்வார்கள்; வேதமும்...எங்குமென்பார் - வேதமும் திருநீறுமே எங்கும் நிறைவுடையனவாகிப் பரவியிடும் என்று சொல்வார்கள்; |
| (வி-ரை) இயல்பால் - அவர் தத்தம் இயல்புக்கேற்றவாறு செய்த தொழில்களால்; |
| நாதன் - தெய்வத் தன்மையின் நிறைவுள்ள தலைவர். |
| நம்பன் - நம்பி அடையத்தக்கவன் என்பது சொற்பொருள்; இது காரண இடுகுறியாய்ச் சிவபெருமானையே உணர்த்தும்; நம்பி - (நம்பப்படுபவன்) என்றதுமிக்கருத்து. |