982திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  அரசன் காதல் மாறுபட்ட நிலையினையும் சமண்மாயம் அழியும் நிலையினையும் எண்ணி மகிழ்ந்து கூறினர்; இந்நிலைகள் இப்பாட்டாற் கூறப்பட்டன.
  முகங்களழிந்தன - முகமழிதல் அகத்தின் வாடிய நிலை முகத்திற் றோன்றநின்ற குறிப்பு. முன்னர் இருமுறையும் தோல்வியுற்றமையும், வேந்தன் உண்மையறிந்து தங்கள் கட்டினின்றும் நீங்கியமையும், இனிவரும் வாதிலும் உண்மையானாதல் வஞ்சத்தானாதல் தாம் வெற்றியடையமாட்டாத நிலைமையும், அதன் பிறகு தாமும் (கழுவேறித்) தமது சமயமும் மாயவேண்டிய நிலைமையும் எண்ணி வாடினர்; அழிந்தன - அழிந்த நிலைமையினை. அழிந்தன - இறந்தகாலம் பின்னர் வரும் அழிவு இப்போதே வந்து விட்ட உறுதி காட்டிற்று.
  வஞ்சனைகள் - பொய்யினாலும் வஞ்சனையினாலும் செய்த சூழ்ச்சி(செயல்)கள்; மாயாசாலங்கள்; குலைதல் - நிலையழிதல். ஈண்டும் இறந்தகாலம் உறுதியும் விரைவும் குறித்தது;
  மாறன் காதல் மாறின வண்ணம் - அரசன் அடிகள்மேல் வைத்த திண்ணிய காதல் இவ்வளவு விரைவில் முழுதும் மாறினவண்ணம்தான் என்ன அதிசயம் என்றது. மாறன் - மாறின - சொல்லணி. மாறினவனாதலின் அக்குறிப்புப்பட ஈண்டு மாறன் என்று கூறினார்; என்ன அதிசயம் என்பது இசையெச்சம்.
  விடிவதாய்...இருளும் - இருள் - அதனையுடைய இரவுக்காயிற்று; ஆகுபெயர்; சமணை இரவிருளாகக் கூறியது உருவகம்.
  விடிவதாய் முடிந்தது - இருள் - விடிவது - முடிவது - இரவு இருள் நீங்கிப் பொழுது புலர்ந்தது; ஏனையிருள்போல அழிவின்றி ஒதுங்கி நிற்பதன்றி இவ்விருளின் செயல் அழிந்து முடிவதாயிற்று என்பார் விடிவதாயிற்று என்றொழியாது இருள் முடிந்தது என்றார். விடிவதாய் - விடியற் பொழுதாய் வர என்ற குறிப்புமாம். சூரியனாகிய பிள்ளையார் வர என்றது இடத்துக்கேற்ப வருவித் துரைத்துக்கொள்க; முடிந்தது என இறந்தகாலத்தாற் கூறியது விரைவில் நிகழும் உறுதிபற்றி.
 

805

2704
"நெருப்பினிற் றோற்றார் தாங்க ணீரில்வெல் வர்களோ?" வென்பார்;
"இருப்புநெஞ் சுடையா ரேனும் பிள்ளையார்க் கெதிரோ?" வென்பார்;
"பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள் படுவன பாரீ" ரென்பார்;
"மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரி யார்தா" மென்பார்;
 

806

  (இ-ள்) நெருப்பினில்...வெல்வர்களோ என்பார் - தீயினை ஒட்டிச் செய்த வாதத்தில் தோற்ற இவர்கள் நீரிற் செய்யும் இவ்வாதத்திவ் வெற்றி பெறுவார்களோ? என்று சொல்வார்கள்; இருப்பு....எதிரோ என்பார் - இந்த அமணர்கள் இருப்பு போன்ற கடிய நெஞ்சுடையவர்களாயினும் பிள்ளையார்க்கு எதிராய் நிற்க வல்லரோ? என்று சொல்வார்கள்; பருப்பொருள்....பாரீர் என்பார் - நுண்பொருளல்லாத பருப்பொருளினை பட்டும் உணர்ந்த அவ்வளவில் அடங்கிய அமணர் படஇருக்கும் முடிபினைப் பாருங்கள் என்று சொல்வார்கள்; மருப்புடை...மந்திரியார்தாம் - கொம்புகளைப் போலக் கூரிய நீண்ட கழுமரங்களை மந்திரியாராகிய குலச்சிறையார் செய்வித்துள்ளார் என்று சொல்வார்கள்;
 

806

  (வி-ரை) முன் பாட்டுக்களிற் கூறிய கருத்துக்களன்றி, அமணர்களின் பாலனவாக எழுந்தனவாய் வேறு பலருடைய கூற்றாய் அமைந்தது இப்பாட்டு.
  நெருப்பினில் தோற்றார் நீரில் வெல்வர்களோ - நெருப்பும் ஒரு பூதம்; அதுபோன்று நீரும் ஒரு பூதம்; ஆதலின் ஒன்றிற் றோற்றார் மற்றென்றில் வெல்வரோ என்பது.