984திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்) இனி, நகரமாந்தருள் வேறுசிலர் இனி வரும் நிகழ்ச்சியினையும் அதன் விளைவையும் பற்றித் தங்கள் எண்ணங்களைச் செலுத்திப் பேசும் கூற்றாக அமைந்தது இப்பாட்டு.
  (வி-ரை) ஏடுகள் - பிள்ளையாரும் சமண அடிகண்மாரும் தனித் தனி வேறாக இடுதலின்பன்மையாற் கூறினார்; ஏடு - இங்கு, ஓலை - இதழ் - என்ற பொருளில் வந்தது.
  ஓடு நீருடன் செலாது நிற்குமோ ஓலை - தத்தம் ஏடுகளை வைகையில் இடச் செல்கின்றனர் என்று ஒருவர் கூற அதைத் தொடர்ந்து இன்னொருவர் அவ்வாறு இடுதலில் நீருடன் செலாது தங்கிநிற்கும் ஏடு மெய்ப்பொருள் பரிப்பது என்றும் அதுவே வெற்றி யாமென்றும், இதில் தோல்வியுற்றவர் கழுவிலேற்றி முறைசெய்யப்படுவர் என்றும் அறியப்படுதலின், அவ்வாறு எந்த ஏடுதானாக-ஓலை என்பதன் இயல்பு நீரில் மிதப்பதும் அந்நீருடன் ஒழுகிச் செல்வதுமாகும்; ஆதலின் இவ்விருவர் ஏடுகள் எதுதான் ஓடுநீருடன் செல்லாது இட்ட இடத்தில் தங்கிநிற்க வல்லதாம் என்று ஐயுற்றுக் கூறினார்: இஃது இந்நாளிலும் உலகியற் பொருளியல்புபற்றிக் கூறும் பெரும்பான்மை யோர் கூற்றாதல் காண்க.
  நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர் - இது மேலும் ஒருவர் முன்கூறிய ஐயக் கூற்றினைத் தொடர்ந்துகொண்டு நீர் கூறியது ஒக்கும்; ஆனால் இங்கு அவ்வாறு ஓடுநீருடன் செலாதுநிற்கும் எமது ஓலை என்று துணிந்து இசைந்த பிள்ளையாரது இயல்பினை நீர் அறிந்தலீர்; அவர் ஏனையோர் பெறும் ஞானம்போலன்றி எப்பொருளும் என்றும் எங்கும் நீடிய ஞானம் பெற்றவர் என்பது முன்னர் இங்கு நிகழ்ந்த இரு நிகழ்ச்சிகளாலும், முன் வரலாற்றாலும் அறிந்தனம்; ஆதலின் அவர் அவ்வாறு தமது ஓலையை ஒடுநீருடனே சென்றுவிடாமல் நிறுத்தி வைக்கவும் வல்லவர் என்றார். சடப்பொருளி னியல்புபற்றி உரைத்தார்க்கு இங்கு ஞானத்தின் வலிமைபற்றி உரைக்கப்பட்டது, சித்துப் பொருகிய ஞானமே சடப்பொருளை இயக்குதலால் இவ்வாறு கூறினார். பிள்ளையாரது பல்வேறு அருளிப்பாடுகளிலும் இவ்வாறு ஐயங்கொண்டு அபசாரப்படும் இந்நாண் மாக்கள் இவ்வுண்மை கண்டு தெளிவார்களாக.
  நிறுத்தவும் வல்லவர் - இங்கு அமணர் சமய உண்மை காணக் கேட்டு ஒட்டிய நிலை; ஓலை நீருடன் செல்லாது இட்ட இடத்தில் நிற்பதேயாகும். அதனையே இங்கு இந்நகர மாந்தரும் வினாவியும் விடுத்தும் பேசினார். ஆனால், இட்ட ஏடு அம்மட்டோடு நின்றுவிடாது ஓடும் நீரை எதிர்த்தும் செல்லவைத்தது பிள்ளையார் பெற்றருளிய அருண்ஞானத்தின் பெருமையாம் என்பதை இவ்விருதிறத்தவரும் அப்பொழுது அறிந்திலர்; எதிர்பார்த்தவரு மல்லர். அவர் இட்ட ஏடு "மருவுறு பிறவி யாற்றின் மாதவர் மனஞ்சென் றாற்போல் - எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்" (2744) தன்மை பின் நிகழ்ச்சியின் அறிவிக்க அறிகுவர்; ஆண்டுக் கூறிய உவமையினால் அதன் காரணமும் இயல்பும் உணர்த்தியபடியும் காண்க. ஏனையோர் மனஞ் சொற் செயல்கள் பிறவி வழியே செல்ல, மாதவர் மன முதலாயின பிறவியை எதிர்ந்து செல்வனவாதலின் அத்தகைய பிள்ளையார் ஏடும் நீரினையெதிர்ந்து சென்றது என விளக்கிய குறிப்பும் காண்க.
  நாடெலாங் காண இங்கு நண்ணுவர் காணீர் - முன் கூறியவர் பிள்ளையார் தமது நீடிய ஞானத்தால் ஓலையை ஓடுநீருடன் செலாது நிறுத்த வல்லவர் என்றார்.அதனைத் தொடர்ந்து மேலும் ஒருவர் அவ்வாறு நிறுத்தி வெற்றி பெற்றவராய் நாட்டவராகிய நாம் எல்லாம் காணும்படி சிறிது நேரத்தில் இங்கு வருவர்; அதை நீங்கள் பாருங்கள் என்றார். இங்கு நீடிய ஞானம் பெற்றராகிய அவர் என்ற எழுவாய் வருவிக்க.