[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்991

  (வி-ரை) ஆற்றின் நீர் கடுக ஓடும் மருங்கு உற - பிள்ளையாரும் பிறரும் முன்பாட்டிற் கரைமிசை மருவ வந்தமை கூறினார். இங்குக் கரையைக் கடந்து மணல்வழி உட்சென்று ஆற்றில் நீர் வேகமாய் ஓடும் இடத்தின் பக்கம் சேர்ந்தமை கூறினார். ஆற்றின் - ஆற்றின் பரப்புக்குள்; கடுக - வேகமாக; நீர் ஓடும் மருங்கு - நீர் செல்லும் இடம்; உற - இருதிறத்தவரும் பொருந்த.
  நீற்றணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளையாரும் - திருநீற்றினாலே தான் உய்ந்தமையால் அதனால் நிறைந்த திருக்கோலமே நாயனாரது பெருந் திருக்கோலமாக அரசனைக் கவர்ந்தது என்பது குறிப்பு நிறைமதி - முழுமதி; மதி - அறிவு - ஞானம் - என்று கொண்டு அருள்ஞான நிறைவுடைய என்றலுமாம். இங்கு இனிப் பாண்டியனுக்கு ஞானோபதேசம் செய்யப் புகுகின்றமையால் முழுஞானமுடையராய் ஆசாரியரிலக்கணம் முழுவதும் பெற்றவர் என்ற குறிப்பும்பெற வைத்தார் என்க. "நீற்றணி, விளங்கு மேனி"(2693) என்றதும் ஆண்டுக் கூறியனவும் பார்க்க.
  நிறைமதி - மதி - இரட்டுற மொழிதலால் சந்திரன் என்ற பொருளில் "கலைவளர் மதியே" (990); "மதிக்கொழுந்தை"(2626) என்றும், "நிலத்திடை வானி னின்று நீளிரு ணீங்க வந்த, கலைச்செழுந் திங்கள் போலும் கவுணியர்"(2649) என்றும் ஈண்டு அந்நிலையின் முழுமை குறிக்க "நிறைமதி" என்றும் கூறிய கவிநயமும் உட்குறிப்பும் கண்டுகொள்க. அமுதகலைகள் நிரம்பித் தூய்மை செய்து பிறவிவெப்பத்தை மாற்றத் தண்ணொளி பரப்பித் தண்மை தந்து அண்டமெல்லாம் பரந்து திருநீற்றினொளி தழைத்தலின் மதியை உவமித்தார். நீற்றணி திகழ்ந்த புஎன்றதனுடன் புணர்த்தி ஓதியது மிக் கருத்து; நீற்றனி திகழ்தலின் நிறைமதி போன்றனர் என்ற குறிப்பும் காண்க. "தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே, சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோ, யாற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண், ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா"(308) என்றும், "திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த போதி, லிரண்டுநில வின்கடல்க ளொன்றாகி" (1498) என்றும் கூறிய கருத்துக்கள் காண்க.
  வேற்றுரு - நீற்றணி திகழ்தற்கு வேறாகிய உரு என்பது ; வேறுபாடு உடையது என்றலுமாம்; வேறுபாடாவது "புரட்டரைக் காண கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா) என்றபடி காணத்தகாத நிலை; வேற்றுமை செய்யும் என்ற குறிப்புமாம். இவர்களது உருவே பிள்ளையாரது அருள்பெறு முன் இதஞ் செய்யு முருவாக அரசன் மயங்கிய முன்னை நிலையும் இங்குக் கண்ட மாறுபாடும் கருதுக. இதன் காரணம் 2717-ல் கூறுதல் காண்க.
  விதித்த - ஒட்டி யிசைவுபூண்ட; விதித்தல் - நியமித்துக்கொள்ளுதல்.
  தோற்றவர் தோலார் - முன்னே தோற்றவர் மேலும் தோற்கமாட்டார். இஃது உலகியல் நிலையினைவைத்து எண்ணியது. துன்பவின்பங்கள் மாறிவரும் நிலையும், சோதிட நூற் றுணிபு நிலையும், பிறவும் மனத்துட் கொண்டனர். என்று - என்று கருதி.
  முன்னுற - முந்திக்கொள்ள; துணிந்திடல் - ஒருசொல்.
  இடு - பகுதிப்பொருள் விகுதி. துணிந்திட்டார்கள் - துணிந்தார்; இங்கு இவ்வாறன்றித் தம் கையிலிருக்கும் சமயநூல்களை யிட்டார்கள் என்று உரைத்தனர் முன்உரைகாரர். ஏடு எழுதியிடுதல் மேல்வரும் பாட்டிற் கூறப்படுதலின் அது பொருளன்றென்க.
  திகழும் - என்பதும்பாடம்.