998 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| மறுக்கப்படாது நின்றனவாதலின் அவற்றையும் ஏனைச் சமயங்களின் கொள்கைகளையும் மறுத்துச் சுத்தாத் துவித சைவ சித்தாந்தத்தின் உண்மைத் தன்மையினை நிலைநாட்ட வேண்டியதாயிற்று; இதுவே ஆளுடைய பிள்ளையாரது திருஅவதாரத்தின் தத்துவமாம். "பரசமய நிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலன்" (1917); அற்புதச் செயல் நிகழ்ச்சியால் காட்டப்படும் வெற்றி வேறு; உயர்வு தாழ்வுகளை எடுத்துக் காட்டி நிலைகாட்டுதல் வேறு. இதனை பின்னர் "எஞ்சலின்மந் திரவாத மன்றி யெம்மோ டெதிர்ந்துபொரும் பேசுவதற் கிசைவ தென்று" போதிமங்கையில், அன்பரது அத்திரவாக்கால் தமது தலைவன் இடிவீழ்ந்து இறந்தது கண்டபின்னரும், புத்தர் கூறிச் சாத்திர வாதத்தினை மேற்கொண்டு வந்தமையா லறிந்துகொள்க. | | பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற - எனவே முன்அருளிய பதிகங்களாலும் அருட்செயல்களாலும் பரசமயங்களின் கொள்கைகளின் தாழ்வான தன்மைகளைச் சாத்திர வாதம்பற்றி எடுத்துக் காட்டப்படாமல் எஞ்சிநின்றன என்பதும், அதனையே முன்வைத்து இத்திருப்பதிகம் அருளிச் செய்யப்பட்டதென்பதும் போதருதல் காண்க. திருக்குறிப்பு என்றதும்; இது பரபக்க நிராகரிப்பு எனப்படும். சிவாகமங்களுள்ளும், சிவஞானசித்தியார் பரபக்கத்துள்ளும், சங்கற்நிராகரணத்துள்ளும் இதன் விரிவெல்லாங் கண்டுகொள்க. இத்திருப்பதிகத்தால் இவ்வாறு பரபக்க மறுப்பு மட்டுமேயன்றிச் சைவவுண்மைத் திறத்தினை நாட்டுதலாகிய சைவத் தாபனமும் (நீறாக்குதல்) உடன் செய்தருளினர் பிள்ளையார் என்பதும் (2718) கண்டுகொள்க. | | பரசமயங்கள் - "இச்சமயங்களெல்லாம் புறப்புறச் சமயமும், புறச்சமயமும், அகப்புறச் சமயமும் ஆம். அவற்றுள் புறப்புறச் சமயம்: உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதமென அறுவகைப்படும்; புறச்சமயம்: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும்; அகப்புறச் சமயம்: பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும்; (அகச்சமயம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், முதற் சிவாத்துவ சைவ மீறாக அறுவகைப்படும். அவை பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர வவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.) இவையெல்லாம் அகம் புறம் என்று இரண்டாய் அடங்குமாறும் ஒர்ந்துணர்க. | | "ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதரீறாகிய அறுவரும் வேதஞ் சிவாகம மிரண்டனையும் நிந்திக்கும் நாத்திகராயினும், ஒரு நூலென்றும் பிரமாணமென்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான் அவர் சமயம் புறப்புறச் சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன; | | "தார்க்கிகர் முதற் பாஞ்சராத்திரிகளீறாகிய அறுவரும், வேதம் பிரமாணப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர் தன்னாற் பிராமாணீயங் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும்; மீமாஞ்சகர் கருமகாண்டமாகிய வேதமாத்திரைக்கே பிரமாணங்கொண்டு ஞானகாண்டமாகிய உபநிடதங்களை இகழ்தலானும்; ஏகான்ம வாதிகள் ஞானகாண்ட மாத்திரைக்கே பிரமாணங்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும்; ஏனை மூவரும் வேத வாக்கியங்களிற் றத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணங் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணமெனக் கோடலானும்; இவ்வறுவருஞ் சிவாகம நிந்தகராகலானும் இவர் சமயம் புறச்சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன; |
|
|
|
|