| பரசமயங்கள் பாற - பாறுதல் - நூல்வழியால் மறுக்கப்படுதல்; ஈண்டுச் சமண சமயம் அளவையால் மறுக்கப்படுதல்பற்றி ஒருசிறிது காண்போம். சமணசமய உண்மைகள் எனக் கொள்வன; அருகளைச் சீவனாய்க் கூறுதலும் நித்தியமான இயற்கைஞானமுடையனென்றலும்; (ii) சீவன் சங்கோசவிகாச தன்மியா யிருப்பன் என்றலும்; (iii) பொருளின் தன்மையைப் பலபடக் கூறி அஸ்தி நாஸ்தி - உண்டு இல்லை என்றலும்; (iv) உலகம் ஒருவராற் படைக்கப்பட்டதன் றென்றலும் முதலாயின. (i) அருகக்கடவு ளியல்பு: பாவம் வராது அறத்தினின்றான் என்று அமணர்கள் கூறுதலின், பந்த முதலிய குற்றங்களினின்றும் விடப்பட்டு ஏனை முத்தர்போலச் சேர்க்கைஞானமுடயனேயன்றி இயற்கையாலே அனந்தஞான முதலியவை யுடையனன்று என்பது போதரும்; (ii) சீவன சங்கோசவிகாச தன்மி - அதாவது எடுத்த உடலினளவு பரிணமிக்கும் தன்மயுடையனாதல்; யானையின் உடலிற் பெருத்தும் எறும்பினுடலிற் குறைந்தும் நிற்றல்வேண்டும்; ஒருடலில் ஒரவயவம் குறையில் அவ்வளவில் அச்சீவன் குறைதல் வேண்டும்; பரகாயம் புகும் யோகியின் உயிர் எண்வகைச் சித்திகளுள் பிராகாமிய சித்தியனால் வேற்றுடம்பிற் புகும்போது தான் புகும அவ்வச் சரீரங்களின் அளவிற்கு விரிந்தும் சுருங்கியும் பரிணமித்தல் வேண்டும்; விளக்கு ஓரிடத்திலிருந்த படியே வீடு முழுதும் பரவினாற்போல இவ்வாறு விரியும் எனின் அது விகாரமாதலின் உயிர் சடமாய் அநித்தியமுமாம் ; ஆதலால் அவர் கொள்கை தவறு; (iii) அஸ்தி நாஸ்தி - ஒரு பொருள் உண்டுமாம் இல்லையுமாம்; ஒளியும் இருளும்போல ஒன்றற்கொன்று மாறுபாடாகிய உண்மையும் இன்மையுமாகிய தன்மைகள் ஒருகாலத்தில் ஒரு பொருளில் இருத்தல் இயலாது; இவ்வாறு கூறுதல் காட்சி விரோதம்; சூரியனுள்ள காலத்தில் அஃது இல்லை என்ற பொருள் தோன்றாமையும், பாம்புள்ள காலத்தில் பாம்பில்லை என்று பயமின்மையும் வேண்டும்; அதனால் இல்லை என்றலும், உண்டில்லை என்றலும் பொருந்தாது; ......இன்னும் அவர் கூறும் அனேகாந்தவாதத்தினுள்ளும் ஏழுபொருள் உளவென வகுத்துககூறுதலும் காண்க; (iv) உலகம் நித்தியமாதலின் ஒருவனாற் படைக்கப்பட்டதன்று; இயல்பாயுள்ளதாதலின் எனில்: யாது அவயவப் பகுப்புடையதாய்ப், பலவாய், அசேதனமாய்க் காணப்படும் அது அழியும்; அது ஒருவராற் படைக்கப்பட்ட காரியப் பொருளாம். உலகமும் அவ்வாறு அவன் அவள் அது என்ற அவயவப் பகுப்புடையது; தோன்றிநின்றழியும் தன்மையுடையது; அசேதனமாய்ப் பலவாயுள்ளது; ஆதலின் ஒரு முதல்வனாற் காரியப்படுத்தப்பட்டது. --என்றிவ்வாறு கண்டுகொள்க. (குறிப்பு: இவை பெரும்பாலும் ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரானார் உரையிற் கண்டவாறு தழுவி எழுதப்பட்டது). |