| மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்பட்டு நிகழுமெனக் கொள்; எனவே சத்திநிபாதத்துக்குக் காரணம் மலபரிபாகம் என்பதூஉம், அதுவும் அவ்வாறு பலவேறு வகைப்பட்டு நினழுமென்பதூஉம் பெறப்பட்டன. |
| "சத்திநிபாதம் என்னும் சொல்லியல்பு சத்தியினது வீழ்ச்சி என்றவாறு. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோ ரிடைச்சொல்: ஓ ரவைக்களத்தின் நடுவே ஒரு கல் வந்து வீழ்ந்தால் அவ்வீழ்ச்சி அவ்வவைக்களத் துள்ளாரை ஆண்டுநின்றும் அகல்விக்கும்; அதுபோலச் சத்திநிபாதம் நிகழ்ந்தமாத்திரையே அஃது அவ்வான்மாவை மனைவி மக்கள் முதலிய உலகத்துழனியின் அச்சநிகழ்ந்து அவ்வுலக வாழ்க்கையினின்று வெரீஇப் போந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்வித்தலின் அவ்வொப்பு தோன்றச், சத்தி நிகழ்ச்சி என்னாது சத்தி வீழ்ச்சி யென்றோதப்பட்டது. |
| "மலபரிபாகமாவது மலந் தனது (மறைத்தற்) சத்தி தேய்தற்குரிய துணைக்காரணங்க ளெல்லாவற்றோடும் கூடுதலேயாம்"; ஈண்டுத் துணைக் காரணங்கள் என்றவை சிவபுண்ணியங்களும் அவற்றான் வரும் தூயவுடம்பு முதலிய கருவிகளும் ஆம். இங்குச் சிவபுண்ணியப் பேறாகப் பிள்ளையாரது திருநோக்கம், பரிசம் முதலியவை நிகழ்ந்தமையால் இத் துணைக்காரணங்களாகிய தூயவுடம்பு முதலியவற்றை அரசன் அடையப்பெற்றனன் என்பார்" மாறன் றானுஞ் சிரபுரத் தவைர் தீண்டி....திருநீறு பூசப் பெற்று" என்றதும் காண்க. |
| இருவினை ஒப்பு - "இசைந்த, விருவினை யொப்பி லிறப்பி றவத்தான், மருவுவனா ஞானத்தை வந்து" (8/1 வெண்பா) என்றவிடத்து" ஒருவனுக்குப் பந்த முறுத்துதற்கட் பொன்விலங்கும் இருப்பு விலங்கும்போலத் தம்முட் சமமாகச் புண்ணிய பாவங் களிரண்டுந், தம்மைப்போலக் கெடுதலில்லாத அத்தவங்களின் பயனாகிய பதமுத்திகளை அனுபவித்து வைகும் ஆண்டே தானே ஞானநெறியைத் தலைப்படுவன். அவை அங்ஙன நேராகாவிடின் மீள நிலத்தின்கண் வந்து பிறந்து வினையொப்பு நிகழ்ந்து குவன் றிருவருள் பெற்று ஞானத்தைத் தலைப்படுவன் என்க. "...ஈண்டுக் கூறப்பட்ட இருவேறு புண்ணியங்களுள், இசைத்துவரு வினைகளெல்லாம் பசுக்களை நோக்கிச் செய்யப்படுதலின் பசுபுண்ணியம் எனவும் பெயர் பெறும்..." இனி, இறப்பிறவத்தால் நிகழும் இருவினையொப்பாவது யாதெனிற் கூறுதும்; சஞ்சிதமாய் ஈட்டப்பட்டுக் கிடந்த இருவினைகளும் பக்கவமுறையானே பயனாய் வரும் வழி, நல்வினையுன் மிக்கதாகிய பரிமேத வேள்விப் புண்ணியமும், தீவினையுண் மிக்கதாகிய பிரமக் கொலைப்பாவமும ஒருங்கே பக்குவமெய்திப் பயன்படுதற்கண் ஒத்தனவாயின், அவை தம்முள் ஒன்றானொன் றடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்த *சுந்தோபசுந்த நியாயமாய்க் கெட்டொழியுமாகலின் அவை அவ்வாறு தம்முள் ஒத்தலே இருவினையொப்பெண்பர் ஒருசாரார். சஞ்சிதாமாய்க் கிடந்த புண்ணிங்களும் பாவங்களும் மிகுதி குறைவின்றித் தம்முள் ஒத்தல் இருவினையொப்பென்பர் ஒருசாரர். மிக்க வினையிரண்டுந் தம்முளொத்துக் கெட்டனவாயினும் அவையொழித்தொழிந்த புண்ணிய பாவங்கள் தத்தம் பயனைத் தருதற் கிடையீடின்மையானும், இருவினைகண் முழுதுந் தம்முளொக்குமாறில்லை: ஒக்கமெனினும் அதுபற்றி நீங்குமாறின்மையான் |
| __________________________________________________ |
| *சுந்தோபசுந்த நியாயமாவது: சுந்தன் உபசுந்தன் என்னும் அசுரரிருவரும் திலோத்தமை என்னும் பெண்பொருட்டாக ஒருவரை யொருவர் கொன்றதுபோன்ற ஒரு நெறி. |