பாடல் எண் :3155

நீடு வண்புகழ்ச் சோழர்நீர்நாட்டிடை நிலவு
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடநீ டியவணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
1
புராணம் :- ஏயர்கோன் கலிக்காம நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில் இரண்டாவதாக ஏயர்கோன் கலிக்காம நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை:- ஏயர்கோக்குடியின் வந்த கலிக்காமனாரது அடியவர்களுக்கும் நான் அடியேனாவேன். ஏயர் - குடிப் பெயர். ஏயர் பெருமகன்- (881) என்ற விடத்துரைத்தவை பார்க்க. (II. 1136.) கோன் - தலைமை குறித்து நின்றது; குடித்தலைமையும் அரசர்சேனாபதித் தலைமையும் குறித்தது. இந்நாளிலும் சேனாபதிக்கு "மாட்சிமை தங்கிய" என்று மன்னர்க்குரிய சிதப்புடன் கூறும் மரபு காண்க.
அடியார்க்கும் - உம்மை முன் துதித்த அடியார்களுடனே என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்புமாம். நம்பிகளுடன் கலிக்காமனாரது தொடர்பும் நட்பும் பின்னர்த் திருவருளால் வருவன என்பது இச்சரிதத்துட் காண்க. கழறிற்றறிவாரது வரலாறும் இவ்வாறேயாம். இங்குத் திருவருள் உணர்த்த முன்னுற உணர்ந்து துதித்தவாறாகும்.
வகை:- "கொற்றத்திறல்.....தவிர்ப்பான்" என்று - இது கலிக்காமனார்உடைவாள் கொண்டு தம் வயிற்றிடைக் குத்திக்கொள்வதன் முன் கூறிய வஞ்சின மொழி. "வெற்றியினையும் வலிமையினையு முடைய எந்தையும் அவரது தந்தையும் அவரது தந்தையும் அவர்களையன்றி எங்கள் கூட்டமெல்லாமும் துன்றச் சடையினை உடைய பெருமானே! உனது அடியேம். அவ்வாறிருக்கவும் தேவரீர்வலிய ஆட்கொண்ட வன்றொண்டனோ எனது இந்தப் பிணியினை தவிர்ப்பவன் என்று கூற உடைவாளை உருவி வயிற்றினைக் கீறி நோயினைத் தவிர்த்துக் கொண்டவர்கலிக்காமனாராவர். அவரது திருமரபு ஏயர்களது சிறப்புடைய குடியாகும். ‘ஏகாரம் - ஈற்றசை.'
தந்தை...அடியேம் - இக்கருத்தை விரிநூல் "எம்பிரா னெந்தை தந்தை (ஏயர்- புரா. 392 = 3546) என்ற பாட்டில் ஆசிரியர்எடுத்து விரிவுரை செய்தல் காண்க; திகழ்வன்றொண்டனே - நாங்கள் வழி வழி அடியோம் என்று விடாது பற்றி நிற்க, ஆளல்லேன் என்று சொல்லி மறுத்தவரை வலிய ஆண்ட ஒருவர்என்ற குறிப்புப் பற்றி நின்றது;மற்று இப்பிணி- பிணி வருதற்கு மற்று இயையில்லையேனும் அருளால் வந்தது என்பது குறிப்பு.தெற்ற - நெருங்க; தேற்றம் என்பது தெற்றம் என நின்றதென்றலுமாம். தவிர் - உயிரினையும் துறந்த; உயிர் என்பது அவாய் நிலையான் வந்தது. பகைதவிர் என்ற குறிப்புமாம்.
பெயரும் குடியும் பண்பும் தொகைநூல் பேசிற்று. அவற்றோடு அடிமைத்திறத்தின் உறைத்த பண்பும், சரித வரலாறும் வகை நூல் உரைத்தது. இவை விரிந்த வகை விரிநூலுட் கண்டுகொள்க.
இனி, இப்புராணத்தை 409 திருப்பாட்டுக்களாற் கூறுகின்றார்ஆசிரியர். அவற்றுள் 1 - 8 வரை திருப்பாட்டுக்களில் ஏயர்கோன் கலிக்காமனாரது நாடு - நகரம் - குடி - குலம் - அடிமை - பண்பு முதலிய சிறப்புக்களையும் ஆளுடைய நம்பிகள் சிவபெருமானைத் தூதுவிட்டதனுக்குச் சினந்து இழிப்ப வந்த செயலையும் கூறியருள்கின்றார். அதன்மேல் 9 - 382 பாட்டுவரையில் நம்பிகள் திருத்தொகையருளிய பின், பல தலங்களையும் வணங்கித் திருவொற்றியூர்சார்ந்து, "பிரியே"னென்று சபதம் செய்து, சங்கிலியாரை மணந்து, பின் திருவாரூரை நினைந்து சபதந் தவறியமையாற் கண் மறையப்பெற்று, வரும் வழியில் காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்றுத், திருவாரூர்சேர்ந்து மற்றைக் கண்ணும்பெற்றுப், பரவையார்மாளிகையிற் செல்லவொட்டாமல் பரவையார்ஊடல் கொள்ள அதை நீங்க இறைவரைத் தூதுவிட்டு எழுந்தருளியிருந்தது வரை உள்ள வரலாறுகளைக் கூறுகின்றார். அதன் பின் 383 முதல் 409 வரை அச்செயல் பற்றி ஏயர்கோனார்சினந்து நம்பிகள்பால் பகைமை பூண்ட செயலையும், இறைவன் ஏவலால் சூலை நோயுற்றதும், அந்நோய் நீக்க நம்பிகளை இறைவர்ஏவ, அது தெரிந்து, ஏயர்கோனார்வயிற்றிடை உடைவாளாற் குத்திக் கொண்டு நோயும் உயிரும் தீரக் கிடந்ததையும், அது கண்ட நம்பிகள் தாமும் அவ்வுடைவாளினால் உயிர்துறக்கத் துணிந்தபோது இறைவரருளால் கலிக்காமனார் உயிர் பெற்றெழுந்து உடைவாளைப் பற்றிக்கொள்ள, இருவரும் நண்புரிமை பெற்ற நிலையினையும் கூறிச் சரித நிறைவாக்குகின்றார். இதனால் கலிக்காமனார் சரித அமைதியையும், நம்பிகள் சரிதம் முன்றொடர்ச்சி பெற்று, மேல், கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றிற்றொடர வரும் நிலையினையும் உணர்ந்து கொள்க. இதனை ஆசிரியர் 3162-ல் கூறுதல் காண்க.
விரி:- 3155. (இ-ள்.) நீடு.....நாட்டிடை - நீடிய வண்மையுடைய சோழர்களது நீர்வளமுடைய நாட்டினிலே; நிலவு......கீழ்பால் - நிலவப் பெற்ற பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியினது வடகரையில் கிழக்குத் திசையிலே; ஆடு....நகர்.தான் - ஆடும் பூங்கொடிகளையும் மாடங்கள் நீடியுள்ள அழகிய நகரானது; பீடு....பெயர்த்து - பெருமை தங்கியதிருப்பெருமங்கலம் என்னும் பெயரினை உடையது. (ஆல் - அசை.)
(வி-ரை.) நீடு....கீழ்பால் - அரச மரபும், நாட்டு வளமும், நீர்ச் சிறப்பும் ஒருங்கு கூறிய நயம் காண்க.
காவிரி வடகரைக் கீழ்பால் - காவிரியின் வடகரையில் உள்ள பகுதிகளில் கிழக்கில் உள்ள.
கீழ்பால் - நகர் - பெயர்த்து என்க. ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி - இதனால் நகரச் சிறப்புக் கூறயபடி.
அணிநகர் - கை புனைந்த அலங்காரமன்றி இயல்பாகவே அழகுடைய நகரம்.
பீடு - பெருமை. இது மாறாத சிவமங்கலப் பெருமை. பெருமங்கலம் என்றது நகர்ப் பெருமையினை விளக்கியபடி. தங்குதலாவது தலைவராகிய நாயனார்உயிர்துறந்த ஞான்றும் மாறாது மங்கலம் பொருந்தச் செய்த நிலை.
பெயர்த்து - பெயரினை உடையது. பெருமங்கலம் என்றலே யமையுமாயினும் மேலும் பெயர்த்து என்றது பெயருக்கேற்ற பண்புடையது என்ற குறிப்புப் படக் கூறியதாம். இச்சரிதத்தில் நாயனாரது தேவியார்திருமணத்தினன்று புனைந்த மலர்க்கூந்தலினை அறிய்பெற்ற பின், திருவருளால் மீள வளரப் பெற்றனர். இச் சரிதத்தில் நாயனார்தம்மைத்தாம் உயிர்துறந்தமையால் இழக்க நின்ற மங்கலத்தினை அவர்மீள உயிர்பெற்றெழுந்தமையால் அம்மையார்மீளப் பெற்றனர். இச்சரிதக் குறிப்பும் பெறத் திருப்பெரு மங்கலப் பெயர்த்து என்று கூறிய நயமும், அக்குறிப்பேற நகர்தான் - பெயர்த்தால் என்று ஈரிடத்தும் அசை புணர்த்தி ஓதிய நயமும் கண்டுகொள்க.
தான் - ஆல் - அசை.