பாடல் எண் :3156

இஞ்சி சூழ்வன வெந்திரப் பந்திசூழ் ஞாயில்;
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்;
நஞ்சு சூழ்வன நயனியர்நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர்குஞ்சியின் பரப்பு.
2
(இ-ள்.) இஞ்சி.....ஞாயில் - திருமதில் சூழப்பெற்றுள்ளன எந்திர வரிசைகளாற் சூழப்பட்ட மதில் ஞாயில்கள்; மஞ்சு.....மாடம் - மேகங்கள் சூழப்படுவன மலைகள் போல உயர்ந்த அழகிய மாடங்கள்; நஞ்சு சூழ்வன நயனியர்- விடத்தின் தன்மைபோலக் கொடுமை நிறைந்த கண்களையுடைய பெண்களது; நளின மெல்லடிச் செம்பஞ்சு - மெல்லிய தாமரைபோன்ற அடிகளில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு; சூழ்வன - சூழப்படுவன; காளையர்குஞ்சியின் பரப்பு -இளங்காளையர்களது முடிமயிர்களின் பரப்பு.
(வி-ரை.) ஞாயில் இஞ்சி சூழ்வன; மாடம் மஞ்சு சூழ்வன; குஞ்சியின் பரப்புப் பஞ்சு சூழ்வன என்று கூட்டுக. நஞ்சு சூழ்வன என்றவிடத்து சூழ்வன என்பது பெயரெச்சம் : ஏனைச் சூழ்வன என்பவை வினைமுற்று.
எந்திரப்பந்தி சூழ்ஞாயில் - பகைவர்கள் மதிலைக் கடந்து புகாமைப் பொருட்டு மதில்களிற் பலவகை இயந்திரங்கள் வைக்கப்படுவன: இவை நெருப்பு உமிழ்வன, நூற்றுவரைக் கொல்வன, முதலியனவாகப் பலவகையாயுள்ளன.இந்நாளிலும் கோட்டைமதில்களிலும் வாயில்களிலும் பலவகை இயந்திரங்கள் வைக்கப்படுதல் காண்க. ஞாயில் - மதிலுறுப்பு. இஞ்சி - மதில்: சூழ்வன - சூழல் - சூழ்ச்சியுடன் எண்ணி அமைக்கப்படுதலும் குறிப்பு.
மாடம் மஞ்சு சூழ்வன - என்பது மாடங்களின் உயர்ச்சி குறித்தது.
காளையர்குஞ்சியின் பரப்பு நயனியர்களது அடிச்செம்பஞ்சு சூழ்தல் - தலைவியர்ஊடிய வழி, ஊடல் தீர்த்தற் பொருட்டுக் காளையர் அவர்கள் அடியில் பொருந்த வீழ்தலா லாவது. ஊடலில் இவ்வாறு நிகழ்தலும் மரபென்பர். நஞ்சு சூழ்வன - என்றது பெருங் கோபக் குறிப்பு. நஞ்சு - விடத்தன்மை குறித்தது.
நயனியர் - கண்ணோக்கினாலே காமநோய் புலப்படுப்பாரென்பது குறிப்பு : "ஒருநோக்கு நோய் நோக்கு" (குறள்) "செருவெழுந் தனுவ தொன்றும்" (2995) என்று இதன் தன்மையினைக் குறித்தல் காண்க. காளையர் - என்றதனால் இத்தன்மையின் நிகழும் ஆண்மக்களின் பருவமுணர்த்தியபடி.
குஞ்சியின் பரப்பு - ஆண்மக்களின் பரந்து நீண்ட தலைமயிரின் தன்மை குறித்தபடி. குஞ்சி - இங்கு ஆண்மக்களின் தலைமயிர் குறித்தது.
குஞ்சி ஞாயில் - என்றதனால், நாடு நகரச் சிறப்பும், மாடம் - என்றதனால் நகர வளமும், நயனியர் - காளையர் என்றதனால் மகிழ்ச்சியுடைய மக்களின் வளமும் கூறப்பட்டன. இதனையே மேல்வரும் பாட்டில் தொடர்ந்து சொல்லுதல் காண்க.
சூழ்வன - என்பன இப்பாட்டில் சொற்பின்வருநிலை. இவை பல பொருளாக மதிப்பிட வரும் நிலை ஆசிரியரது கவி நலச் சிறப்பு. 553 முதலியவை பார்க்க .