பாடல் எண் :3157

விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி;
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்;
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்;
உழவ றாதநல் வளத்தன வோங்கிருங் குடிகள்.
3
(இ-ள்.) விழவு......வீதி - விளக்கமுடைய அழகிய வீதிகள் விழாக்களை நீங்காதிருந்தன; முழவு....அரங்கம் - அடர்ந்த கூந்தலையுடைய பெண்களின் ஆடரங்கங்கள் முழா முழக்கத்தினை நீங்காதிருந்தன; மழவு.....முன்றில் - மங்கலம் பொலிகின்ற அழகிய முற்றங்கள் சிறார்களை நீங்காதிருந்தன; உழவு....குடிகள் - செழிப்புடைய பெருங்குடிகள் உழவுத்தொழிலின் நீங்காதநல்ல வளப்பங்களைக் கொண்டிருந்தன.
(வி-ரை.) அறாதன - சொற்பொருட் பின்வருநிலை; நீங்காதிருக்கும் நிலை குறித்தன.
வீதி, அரங்கம், மூன்றில், குடிகள் - இந்நான்கு எழுவாய்களும் பின் வந்தன. முறையே நீங்காது அவை கொண்டு விளங்கும் விழவு முதலியவற்றின் சிறப்பினை முன்னுணர்த்தற்கு.
முழவறாதன அரங்கம் - இவை தெருவுதொறும் உள்ள நாடக மேடைகள். "கவினார்வீதித், தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே" (6) "வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர" (மேற்படி 1); முழவு - மத்தளவோசை.
மணிமுன்றில் - மனைகளின் முற்றங்கள். முழவறாதன மூன்றில் - என்றது சிறார்கள் மனை முற்றங்களில் விளையாடும் தன்மை குறித்தது. மழவறாதன அரங்கம் - பொலி - "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத, னன்கல நன்மக்கட் பேறு" என்ற கருத்தினை உட்குறித்தது. முன் 1908, 1909 பாட்டுக்களில் இதனை விரித்தமை காண்க. மங்கல - மழவு - என்று கூட்டியுரைப்பதும் சிறப்பு.
உழவறாத நல் வளத்தன் - குடிகள் - இப்புராணமுடைய நாயனார்வேளாளராதற் குறிப்பினால் அச்சிறப்புப்பற்றிக் கூறிய நயம் கண்டுகொள்க. இஃது ஆசிரியரது தெய்வக் கவிநலச் சிறப்புக்களுள் ஒன்று. ஆளுடைய பிள்யைார், சண்டீச நாயனார், திருநீல நக்க நாயனார், கண்ணப்பர், ஆளுடைய அரசுகள், திருநாளைப் போவார், அதிபத்தர் முதலியோர் புராணங்களுள்ளும் அவ்வவர்மரபுச் சிறப்புக் காட்டும்படி அவ்வந் நாடு நகரங்களின் பொலிவு கண்டு காட்டிய நயங்களும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன.
நல் வளம் - உழவினால் வரும் வளங்களின் ஈடற்ற உயர்வும், ஏனைத் தொழில் வளங்களிற் படும் குற்றங்களில்லாமையும் குறிப்பு.