பாடல் எண் :3158

நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னிற்றிகழ் கண்டர்தங் காதலோர்குழுமிப்
பாரின் மிக்கதோர்பெருமையாற் பரமர்தாள் பரவுஞ்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.
4
(இ-ள்.) நீரினில்....குழுமி - கங்கையாற்றினைக் கொண்டு விளங்கும் சடைமுடியினையும், நெற்றிக் கண்ணினையும், மேகம்போல விளங்கும் கண்டத்தினையும் உடைய சிவபெருமானிடம் பேரன்புடையவர்கள் கூடி; பாரின்...பெருமையால் - உலகில் மிக்கதாகிய ஒப்பற்ற பெருமையினாலே; பரமர்....மிக்கது - சிவபரஞ்சுடரின் திருவடிகளையே துதிக்கின்ற சிறப்பினாலே மிகுந்தது; சிவபுரி......சிறப்பால் - அச்சிறப்பினாலே அது சிவபுரி என்று சொல்லப்படும் தகுதியினை யுடையது.
(வி-ரை.) நீர் - சிறப்பினாலே கங்கையாற்றினைக் குறித்தது. நீரினிற் பொலிதல் - நீரைச்சூடி விளங்குதல். காதலோர் - அன்பு காதலாய் முற்றி விளைந்த பேரன்பர்கள்.
காதலோர்குழுமிப் பாரின் மிக்கதோர்சீர் - இப்புராணத்து வரலாற்றினுள் "எம்பிரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்டமெல்லாந், தம்பிரா னீரே யென்று வழிவழி சார்ந்து வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை" (3546 - 392) என்று வரும் கருத்தின் முற்குறிப்பு.
பாரின் மிக்கது ஓர்பெருமை - உலகில் வரும் ஏனை எல்லாப் பெருமைகளிலும் இதுவே மிக உயர்ந்தது என்பதாம்.
பரமர்தாள் பரவும் - தான் - தாள்களையே என்று பிரிநிலை யேகாரம் தொக்கது. "தம்பிரா னீரே" (3546).
சிறப்பால் - அச்சிறப்பினாலே; சிறப்பால் - எனத்தகும் - என்று கூட்டுக.
மிக்கது - முன்கூறிய திருப்பெரு மங்கலமாகிய அந்நகர் என்று எழுவாய் முன் (3155) பாட்டினின்றும் வருவிக்க. முன் இரண்டு பாட்டுக்களால் உலகியல் நிலையில் நாடு நகர்வளங் கூறினார். இப்பாட்டினால் உயிரியல் நிலையின் சிறப்பினாற் கூறினார்.