இன்ன வாழ்பதி யதனிடை யேயர்கோக் குடிதான் மன்னி நீடிய வளவர்சே னாபதிக் குடியாந் தொன்மை மேவிய தொடர்ச்சியா னிகழ்வது தூய பொன்னி நாட்டுவே ளாண்மையி லுயர்ந்தபொற் பினதாம். | 5 | (இ-ள்.) இன்ன.....குடிதான் - இத்தன்மைத்தாகிய வாழ்வுடைய பதியினிடத்தே ஏயர்கோக்குடியானது; மன்னி...குடியாம் - நிலைபெற்று வழிவழி வளர்ந்து வருகின்ற சோழர்களது சேனாபதிக் குடியாகிய; தொன்மை....நிகழ்வது - பழமை பொருந்திய தொன்று தொட்டு வரும் தொடர்ச்சியினாலேயே பொலிவது; தூய.....பொற்பினது - தூய்மையுடைய காவிரி நாட்டில் வேளாண்மைத் திறத்தால் உயர்ந்த அணிநலம் வாய்ந்தது; (ஆல் - அசை.) (வி-ரை.) ஏயர்கோக்குடி - குடியாம் : (அது) நிகழ்வது - பொற்பினது என்று கூட்டி முடிக்க. ஏயர் - ஹே ஹயர்என்பது ஏயர்என மருவியது. இதுவே கேகயர் - என வழங்கலாயிற்றென்பர். ஏயர் - குடிப் பெயர். கோ - தலைமை குறித்தது. சேனாதிபதிக் குடியாம் - சேனாதிபதியாக வரும் தன்மை ஒரு குடியின் வழிவழி மரபுரிமையாக வந்தது முன்னைநாள் வழக்கு. 881-ல் உரைத்தவை பார்க்க. ஏயர்கோக் குடி - கோ - தலைமை என்பது முதனூலாகிய "ஏயர்கோன் கலிக்காமன்" என்ற திருத்தொண்டத் தொகையானும், வழிநூலாகிய "ஏயர்சீர்க்குடியே" என்ற திருத்தொண்டர்திருவந்தாதியானு மறிக. தொன்மை மேவிய தொடர்ச்சி - பழங்கால முதல் இடையறாது தொடர்ந்து வழி வழி வருவது. நிகழ்தல் - விளங்குதல். வேளாண்மை - உழவுச் செல்வம்; பொற்பாவது - செழிப்பும் தகுதியும் சிறப்புமாம்: வேளாண்மையில் - வேளாண்மை காரணமாக என்க. நாட்டு - நாட்டின்; நாட்டுக்குச் சிறப்பாயுரிய என்றலுமாம். வோளண்மையிற் பொலிவது - இப்புராணமுடைய நாயனார் வேளாளராதற் குறிப்பு. வரும் பாட்டுப் பார்க்க. நிகழ்ச்சியா னிறைவது - என்பதும் பாடம். |
|
|