பாடல் எண் :3160

அங்கண் மிக்கவக் குடியினி லவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர்கலிக்காம ரென்பார்
தங்க ணயக ரடிபணி வாரடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
6
(இ-ள்.) அங்கண்....அவதரித்துள்ளார் - அவ்விடத்துப் பெருமையால் மிகுந்த அந்தக் குடியிலே வந்து அவதரித்துள்ளவர்; கங்கை....என்பார் - கங்கை வாழும் சடைமுடியினை யுடைய சிவபெருமானுடைய திருத்தொண்டராகிய கலிக்காமர் எனப்படுவர்; தங்கள்...புரிந்தார் - தமது பெருமானது திருவடி பணிவார்களது திருவடிகளைச் சார்பாகக் கொண்டு மேன்மேல் வளரும் மிக்க அன்பினாலே அவ்வடியவர்பணியினை விரும்பிச் செய்து வந்தார்,
(வி-ரை.) அங்கண் - அ - முன்கூறிய அந்த ஏயர்கோக்குடி என அகர மிரண்டும் முன்னறி சுட்டு.
கங்கை.....தொண்டர் - சிவனடியார்; என்பார் - எனப்படுவார்.
தங்கணயகர்.....புரிந்தார் - தாம் சிவனுக்குத் தொண்டு பூண்டொழுகியதுடன் சிவனடியார்கள் பணியினை அதனினும் மிக்க அன்புடன் விரும்பிச் செய்தனர் என்பது. சார்ந்து - சார்பாகக் கொண்டு. பொங்குதல் - மேன்மேல் அதிகரித்தல். போற்றுதல் - விரும்பி மேற்கொள்ளுதல். புரிதல் - இடைவிடாது நினைத்தல் - சொல்லுதல் - செய்தல். இதனால் இந்நாயனார் சிவபத்தியேயன்றிச் சங்கம பத்தியிலும் சிறந்தவர்என்பதும், அவ்விரண்டனுள்ளும் அடியார் பணியே சிறக்க மேற்கொண்டொழுகினர் என்பதும் கூறப்பட்டன. இவர் வழிவழி சிவனடிமையிற் சிறந்தொழுகினர் என்பது மேல் (3546) கூறப்படுதல் காண்க. கலிக்காமர் என்பார் - உள்ளார் என்க: எழுவாய் பின் வைக்கப்பட்டது. அவரது அடியார்க்கடியராந் தன்மையை முடித்துக் காட்டுதற் பொருட்டு.