பாடல் எண் :3162

நாவ லூர்மன்னன் நாதனைத் தூதுவிட் டதனுக்
"கியாவ ரிச்செயல் புரிந்தன!" ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தவச் செயலினை விளம்புவா னுற்றேன்.
8
(இ-ள்.) நாவலூர்....தூது விட்டதனுக்கு - திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர்சிவபெருமானைப் பரவையார்பால் தூதாக அனுப்பியதனுக்கு; யாவர்...இழிப்ப - இவ்வாறு செயல் செய்வோர்யாவர்! என்று அவர்குறைகூற; தேவர்தம்பிரான்......திருத்திய - தேவ தேவராகிய சிவபெருமான் அவரது அக்கருத்தினைத் திருத்தும் பொருட்டு; அதற்கு.....உற்றேன் - அதற்குப் பொருந்த வந்த அவ்வருட்செயலின் வரலாற்றினைச் சொல்லப் புகுகின்றேன்.
(வி-ரை.) இப்பாட்டினால் நாயனாரது சரித வரலாற்றின் சுருக்கமும் அமைப்பும் கூறப்பட்டன. சரிதம் பின்னர் (புரா. 383=3537 முதல் புரா. 408 = 3562 வரை) உள்ள பாட்டுக்களிற் கூறப்படுதல் காண்க.
இப்பாட்டினால் சரிதத்துக்குப் பதிகம் போலச் சுருக்கம் கூறித்தோற்றுவாய் செய்துகொண்டு, நம்பியாரூரர்வரலாறு பற்றி இச்சரிதம் நிகழ்தலால், அவர் திருத்தொண்டத்தொகை யருளியது முதல் பரவையா ரூடலினைத் திருவாரூர்ப் பெருமான் றூது சென்று தீர்த்த துணையாலே இனிதமர்ந்தருளியது வரை, அவரது வரலாற்றினை முறையே கூறி, அவ்வாறு நம்பிகள் பெருமானைத் தூதுவிட்ட செய்தி கேட்டுக் கலிக்காமனார் வெம்பி நம்பிகள்பால் செற்றங்கொண்டார் என்று இச்சரிதத்தினைத் தொடங்கி விரித்து முடித்தனர் ஆசிரியர். இதனால் நம்பிகளது சரிதமும், முன், தடுத்தாட்கொண்ட புராணத்திறுதியில் விடுத்த இடத்தினின்று இச்சரித நிகழ்ச்சிவரை உடனே கூறிச் செல்லும் கவிநயமுங் கண்டுகொள்க.
நாவலூர் மன்னர் - திருநாவலூரில் அவதரித்த நம்பியாரூரர். மன்னர் - தலைவர்; மன்னராகிய நரசிங்கமுனையர்பால் வளர்ந்த காரணக் குறிப்பும்பட நின்றது.
நாதனைத் தூது விட்டதனுக்கு - நாதன் - தமது இறைவராகிய திருவாரூர்ப் பெருமான். தூதுவிட்ட செய்தி பின் 3477 (புரா. 323) முதல் 3528 (374) வரை வரும் பாட்டுக்களாற் கூறப்படும். விட்டதனுக்கு - விட்டமைபற்றி.
"யாவர்- புரிந்தனர்!" என்று இழிப்ப - யாவர்புரிந்தனர் - செற்றங்கொண்ட அவலக் குறிப்புப் பற்றிய வினா. வேறு ஒருவருமிலர் என்பது. இழித்தல் - குறைவுபடக் கூறுதல்.
திருத்திய - திருத்துதற்கு - திருத்தும் பொருட்டு.
திருத்திய - மேவ வந்த - செயல் என்க. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
வந்தவச் செயல் - இறைவர் இவ்விருவருக்குமிடையாடிச் செய்த செயலும், கலிக்காமனாரது செயலும், நம்பிகளது செயலும் கூடிய தொகுதி. செயல் - பால் பகா அஃறிணை.