திருத்தொண்டத் தொகையருளித் திருநாவ லூராளி கருத்தொன்று காதலினாற் கனகமதிற் றிருவாரூர் ஒருத்தர்கழன் முப்பொழுது முருகியவன் பொடுபணிந்து பெருந்தெழுமெய் யன்பினாற் பிரியாதங் குறையுநாள், | 9 | (இ-ள்.) திருத்தொண்டத்தொகை அருளி - திருத்தொண்டத் தொகையாகிய திருப்பதிகத்தினை அருளிச் செய்தபின்; திருநாவலூராளி - திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர்; கருத்தொன்று காதலினால் - மனம் ஒன்றுபட்ட பெருவிருப்பத்தினாலே; கனகமதில்....பணிந்து - பொன்மதில் சூழ்ந்த திருவாரூரில் எழுந்தருளிய ஒருவராகிய தியாகேசப் பெருமானுடைய திருவடிகளை ஒவ்வொருநாளும் மூன்று போதிலும் மனமுருகிய அன்பினொடும் பணிந்து; பெருத்து....நாள் - பெருகி மேன்மேல் எழுகின்ற மெய்யன்பினாலே பிரியாமல் அத்திருப்பதியில் தங்கிய காலத்தில்; (வி-ரை.) திருத்தொண்டத்தொகை அருளி - இது தடுத்தாட்கொண்ட புராணத்திறுதியிற் கூறப்பட்டது. (347-348); அத்தொடர்பும் சரிதத்தொடர்பும் தெரிய இவ்வாற்றாற் கூறினார். கருத்தொன்று காதல் - மனத்தினை வேறொன்றினும் வைக்காமல் சிவனிடத்தே ஒன்றவைத்த பெருவிருப்பம். இது சிவயோகம் எனப்படும். காதல் - நாயகன் நாயகிகளிடையே நிகழ்வது; இங்கு ஆன்மநாயகனாகிய சிவபெருமானிடத்து நிகழும் அன்பின் மேன்மை குறித்தது. "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா). ஒருத்தர் - சிவபெருமான்; வேதங்களுள் "ஒன்று" என்று சொல்லும் பரம்பொருள். இங்குத் தியாகேசரைத் குறித்து நின்றது. ஒருத்தர்கழல் முப்பொழுதும் - எண்ணலங்காரச் சுவைபடக் கூறியது. உருகிய அன்பு - மனம் உருகுதற்குக் காரணமாகிய அன்பு. பெருத்தெழும் மெய்யன்பினால் - மேன்மேல் வளர்கின்ற உண்மை அன்பினாலே கருத்தொன்று காதல் மனமுருகிப் பணியக் காரணமாயிற்று; அது மெய்யன்பாய் விளைந்து பெருத்தெழுந்தது; அதனால் முப்பொழுதும் வணங்கிப் பிரியாது உறைந்தனர்எனக் காரணகாரியத் தொடர்பு கொண்டு உரைத்துக் கொள்க. திருநாவலூராளி - பிரியாது உறையும் நாளில் குண்டையூர்க் கிழவர் - அடைந்து அன்பால் ஒழுகுவார் - பாடி சமைத்தார் என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து உரைத்துக்கொள்க. |
|
|