பாடல் எண் :3164

தாளாண்மை யுழவுதொழிற் றன்மைவளந் தலைசிறந்த
வேளாளர்குண்டையூர்கிழவரெனு மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்மறையவராய் வழக்கினில்வென்
றாளாகக் கொண்டவர்தா ளடைந்தன்பா லொழுகுவார்,
10
(இ-ள்.) தாளாண்மை.....மேதக்கோர் - தமது தாளாண்மையினால் உழவுத் தொழிலின் வரும் தன்மை வளங்களால் மிக்க சிறப்புடைய வேளாளராகிய குண்டையூர்கிழார் என்ற மேம்பாடுடைய பெரியார்; வாளார்வெண்.....ஒழுகுவார் - ஒளிபொருந்திய வெண்பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமான் மறைவராகி வழக்கிட்டு வென்று ஆளாகக் கொண்ட நம்பியாரூரது திருவடிகளைச் சார்வாக அடைந்து அன்பு பூண்டு ஒழுகுவராய்;
(வி-ரை.) தாளாண்மை - விடா முயற்சி. தாள் - முயற்சி; ஆண்மை - ஆளும் தன்மை. "தாளாற்றி" (குறள்).
தாளாண்மை உழவு தொழிற்றன்மை வளம் - உழவு தொழிற் பெரு முயற்சியினாலே வரும் நேரியவளங்கள். இவை நெல் முதலியனவும், காய்கனி முதலியனவும், பால்தயிர்நெய் முதலியனவும், இவைகொண்டு பெறும் பிறவுமாம்; இவற்றை மேல்வரும் பாட்டில் விரித்தல் காண்க.
வேளாண் குண்டையூர்க் கிழவர் - வேளாளர் என்பதனால் மரபுச் சிறப்பினையும், குண்டையூர்க் கிழவர் என்பதனால் ஊர்பற்றிய பெயர்ச்சிறப்பினையும் கூறியபடி. கிழவர் - கிழவர் மரூஉ. இது வேளாளர்மரபுக்கு வழங்கும் சிறப்புப் பெயர் இது முன்னாள் மிகுதியும் வழக்கிலிருந்தது; இந்நாள் அருகி வழங்குவதாயிற்று. தனிப் பெயர்கூறாது ஊர்பற்றிக் கூறியது மரபின் சிறப்புணர்த்திற்று. (தொல். பொருள் - மரபு - 74 உரை) தேவாரப் பதிகத்தினுள் இவ்வூரினையே சிறப்பித்தமை காட்டும் குறிப்புமாம்.
ஆளாகக்கொண்டவர் தாள் அடைந்து - ஆளாகக்கொண்டவராதலின் அவர்தாளடைந்து எனக் காரணக் குறிப்புப்பட ஓதினார்.
வழக்கினில் வென்று ஆளாகக்கொண்டவர் - தடுத்தாட்கொண்ட வரலாறு; நம்பியாரூரர் வரலாற்றில் குண்டையூர்க்கிழார் ஈடுபட்டு அன்பு செய்து ஒழுகினார் என்பது.
அன்பால் ஒழுகுவார் - இவ்வொழுக்க நிலை பற்றிய செயலை மேற்பாட்டிற் கூறுவார்.