பாடல் எண் :3165

செந்நெல்லும் பொன்னன்ன செழும்பருப்புந் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதுமுத லெண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர்வன்றொண்டர்க் கமுதாக வழுவாமற்
பன்னெடுநாட் பரவையார்மாளிகைக்குப் படிசமைத்தார்.
11
(இ-ள்.) செந்நெல்லும்....பலவளங்கள் - செந்நெல்லும் பொன்போன்ற செழும் பருப்பும் இனிய கரும்பாகிய இனிய நல்ல அமுதும் முதலாகிய அளவில்லாத பெரிய பல வளங்களையும்; மன்னியசீர்...அமுதாக - நிலைபெற்ற சிறப்புடைய வன்றொண்டராகிய நம்பியாரூரருக்குத் திருவமுதாக உதவும் பொருட்டு; வழுவாமல்...படிசமைத்தார் - தவிராமல் பல நீண்ட நாட்கள் பரவையாரது திருமாளிகைக்குப் படிகொடுத்து வந்தார்.
(வி-ரை.) செந்நெல் - செந்நெல்லின் மேன்மை பற்றி அரிவாட்டாய நாயனார் புராணமும், பிறவும் பார்க்க.
பொன்னன்ன செழும் பருப்பு - பொன்னிறம் பருப்பின் உயர்வு காட்டுவது.
தீங்கரும்பின் இன்னல்ல அமுது - இன் - நல்ல - இனிய என்பது சுவையினையும் - நல்ல என்பது குணத்தினையும் குறித்தது. அமுது என்றார்நேரே உணவாகப் பயன்படுதற் குறிப்பு.
வன்றொண்டர்க்கமுதாக - "வழக்கினில் வென்றாளாகக் கொண்டவர்" என்று முன்பாட்டிற் கூறியதற் கேற்ப வன்றொண்டர் என்றார்.
படி - படித்தரம்; தினந்தோறும் அமைக்கும் அமுது படிக் கட்டளை, சமைத்தல் - அளவிட்டுச் செலுத்துதல்.