பாடல் எண் :3166

ஆனசெய லன்பின்வரு மார்வத்தான் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப வெடுப்பதற்குப் போதாமை
மானவழி கொள்கையினான் மனமயங்கி வருந்துவார்;
12
(இ-ள்.) ஆனசெயல்....ஆற்ற - ஆயின அச்செயலை அன்பினால்விளைகின்ற மிக்க ஆசையால் மனமகிழ்ந்து செய்வதற்கு; வான முறை.....சுருங்க - மழை முறைப்படி பெய்யாமையால் பெருநிலத்தின் வளங்கள் சுருங்கியபடியினாலே; போனகம்....போதாமை - அமுதாகிய நெல்லும் பிற படித்தரங்களும் கொண்டு செலுத்துவதற்குப் போதா நிலைமையினால்; மானவழி....வருந்துவார் - மானமழிந்த கொள்கையினாலே மனமயங்கி (குண்டையூர் கிழார்) வருந்துவாராகி;
(வி-ரை.) ஆன - ஆயின. முன் பாட்டிற் கூறலாயின; ஆக்கமான என்ற குறிப்புமாம்.
ஆற்ற - ஆற்றுதற்கு; ஆற்றப் - போதாமை என்று கூட்டுக.
வானம் முறை வழங்காமை - வானம் - மழை; முறை - பருவ முறையாகிய நிலையும், மாதமும்மாரி என்ற நிலையும் குறித்தது; வழங்காமல் - வழங்காமையால்.
வளம் - உழவினால் வரும் விளைபொருள்கள்.
போனக நெற்படி - போனகம் - உணவு; படி - படித்தரம்.
நெற்படி - என்றதனால் நெல் முதலாகிய உணவுக்குரிய பண்டகங்ளெல்லாம் கொள்ளப்படும்.
எடுப்பதற்கு - எடுப்பித்துக் கொண்டுபோய்ச் செலுத்துவதற்கு.
போதாமை - போதாமையால்.
மானம் அழி கொள்கை - மானம் - பெருமை. உயிர்பற்றிய கடமைகளில் கொண்ட ஊக்கமாகிய உணர்ச்சி குறித்து நின்றது. உலகர்கொள்ளும் ஏனைய பெருமைகள் பாச சம்பந்தமாதலின் ஈண்டைக்குப் பொருந்தா என்க.
இயல்பின்வரும் - என்பதும் பாடம்.