"வன்றொண்டர் திருவாரூர்மாளிகைக்கு நெல்லெடுக்க இன்றுகுறை யாகின்ற தென்செய்கே!" னெனநினைந்து துன்றுபெருங் கவலையினாற் றுயரெய்தி யுண்ணாதே அன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார், | 13 | (இ-ள்.) வன்றொண்டர்......நினைந்து - "வன்றொண்டரது திருவாரூரின் மாளிகைக்கு நெற்படி எடுத்து உய்ப்பதற்கு இன்று குறைபாடு நேர்கின்றதே; யான் என்ன செய்வேன்!" என்று எண்ணி; துன்றுபெரும்....எய்தி - மிக்கபெருங் கவலையினால் வருந்தி; உண்ணாதே....கொள்ள - உணவு கொள்ளாமல் அன்றிரவில் துயின்றனராக; அங்கணர்வந்து அருள்புரிவார் - அங்கணராகிய சிவபெருமான் அவர்பால் வந்து அருள் செய்வாராய் : (வி-ரை.) வன்றொண்டர் - இப்பெயராற் கூறினமை பற்றி முன் 3164-ல் உரைத்தவை பார்க்க. குறை ஆகின்றது - குறை - பண்டங்களிற் குறைபாடும், அதுகாரணமாக நியதமாகக் கொண்ட செயலாற்ற இயலாமையாற் போந்தகுறைபாடும் குறித்தது. உண்ணாதே - கவலையினால் - துயில்கொள்ள - வன்றொண்டர்க்கு அமுதுபடி சமைக்கக் குறையாயினமையின் அதனைத் தமக்கு நேர்ந்த குறையென்று கொண்டு உணவு உண்ணாராயினர். உண்ணாது கிடத்தல் மனத்துயரங் காட்டும் அறிகுறி "அமுது செய்யாதே" (1561) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. உண்ணாதே துயில்கொள்ள - அருள்புரிவார் - உண்ணாதே கவலையினால் துயில் கொண்டமையினாலே எனக் காரணப் பொருள் கொள்க. துன்றுபெருங் கவலையினால் - அடியாரைப் பற்றிய பெருங் கவலையாதலின் அங்கணர்வந்து அது தீர அருள் புரிவாராயினர்என்பது "தாள்சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" என்ற திருக்குறளினாலும் பெறப்படுதல் காண்க. அருள்புரிவார் - அருளி - ஏவ - என வரும்பாட்டுடன் முடிக்க.
|
|
|