"ஆரூரன் றனக்குன்பா னெற்றந்தோ" மென்றருளி நீரூருஞ் சடைமுடியார்நிதிக்கோமான் றனையேவப் பேரூர்மற் றதனெல்லை யடங்கவுநென் மலைப்பிறங்கல் காரூரு நெடுவிசும்புங் கரக்கநிறைந் தோங்கியதால். | 14 | (இ-ள்.) ஆரூரன்....அருளி - ஆரூரனுக்குப் படி அமைப்பதற்காக உன்னிடத்து நெல்லினைத் தந்துள்ளோம்" என்று கூறி; நீரூருஞ்.......யேவ - கங்கை தவழ்கின்ற சடைமுடியினையுடைய பெருமானார்குபேரனை ஏவியிட அதனாலே; பேரூர்...ஓங்கியது - பெரிய அவ்வூரின் எல்லை முழுதும் நெல்மலையாகிய பெருக்கம் மேகங்கள் தவழும் நீண்டவிசும்பும் மறையும்படி நிறைந்து உயர்ந்தது; ஆல் - அசை. (வி-ரை.) ஆரூரன்றனுக்கு....அருளி - இது குண்டையூர்கிழாருக்கு இறைவர் கனாவில் அருளியது. நிதிக்கோமான்றனை ஏவ - நிதிக்கோமான் - அளகைக் கிறைவனாகிய குபேரன்; குபேரன் சிவபிரான்றோழர். அட்ட திக்குப் பாலகர்களுள் ஒருவராய், நிதிக்கு அரசராய்ச், சிவபிரா னேவலின்படி அடியார்களுக்கு வேண்டிய வளங்களை அங்கங்கும் கொண்டு உய்க்கும் நியமத்துட்பட்டவர். இளையான்குடி மாற நாயனார் வரலாறும் (465), குங்குலியக்கலய நாயனார்வரலாறும் (844) பிறவும் பார்க்க. ஏவ - நென்மலையாகக் குண்டையூரில் கொண்டு உய்க்கும்படி ஏவ - இது பின்விளைவினா லறிக. பேரூர்....ஓங்கியதால் - பேரூர் - பெரிய ஊர்; இங்குக் குண்டையூரைக் குறித்தது. மலைப்பிறங்கல் - மலை போன்ற பெருக்கு. பிறங்கல் - உயர்ச்சியுமாம். விசும்பும் கரக்க கரத்தல் மறைத்தல். விசும்பு கரக்க என்றது உயர்ச்சி குறித்தது. ஏவ ஓங்கியது - இறைவர்ஏவுதலும் செயல் நிகழ்ச்சியும் உடன் நிகழ்ந்த விரைவு குறித்தது. ஆரூரன்தனக்கு உன்பால் நெல் தந்தோம் - ஆரூரன்றனக்கு - ஆரூரருக்குப் படி சமைப்பதற்காக; இஃது ஆரூரருக்கே நேரே தரப்பெறாமல் குண்டையூர் கிழாருக்குத் தரப்பெற்றமை என்னையோ? எனின், குண்டையூர் கிழாரின் மனக்கவலை தீர்வதற்கும் அவரது திருப்பணி நிறைவேறக் காண்பதற்குமாக இறைவர் அருள் வைத்தபடி என்க. மேற்கூறப்படுவனவும் காண்க. அடங்கவும் - முழுவதும் - ஊர்எல்லை நென்மலையின் உள்ளே அடங்க என்ற குறிப்புமாம், பிறங்கி - பிறங்க - என்பனவும் பாடங்கள். |
|
|