அவ்விரவு புலர்காலை யுணர்ந்தெழுவா ரதுகண்டே "யெவ்வுலகி னென்மலைதா னிது?"வென்றே யதிசயித்துச் செவ்வியபொன் மலைவளைத்தார் திருவருளின் செயல்போற்றிக் கொவ்வைவாய்ப் பரவையார் கொழுநரையே தொழுதெழுவார், | 15 | (இ-ள்.) அவ்விரவு......கண்டே - குண்டையூர் கிழார் அன்று இரவு விடியற் காலையில் துயிலுணர்ந் தெழுவாராய் அதனைக் கண்டே; எவ்வுலகின்.....அதிசயித்து - "இதுதான் எந்தவுலகத்தின் விளைந்த நென்மலை" என்று அதிசயம் கொண்டு; செவ்விய.....போற்றி - சிவந்த பொன்மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமானுடைய திருவருட் செயலினைத் துதித்து; கொவ்வைவாய்.....தொழுதெழுவார் - கோவைக் கனிபோன்ற வாயினையுடைய பரவையாருடைய கொழுநராகிய நம்பியாரூரரையே தொழுதெழுவாராகி, (வி-ரை.) அவ்விரவு - இறைவர்தமது கனவில் வந்து சொல்லிய அவ்விரவு என்று அகரம் முன்னறி சுட்டு. புலர்காலை உணர்ந்தெழுவார் குண்டையூர் கிழாரென்னும் எழுவாய் அவாய் நிலையான் வருவிக்க (3164); உணர்ந்து - துயிலுணர்ந்து; புலர்காலே உணர்ந்து என்றதனால் இது வைகறைக்கனா வென்பதும், அதனால் உடன் பயன்றருவதென்பதும் கருதப்படும். "புலர்வுறும் வைகறை" (2106) என்ற விடத்துரைத்தவை பார்க்க. அதுகண்டே - அது - ஊர்எல்லையடங்கவும் விசும்பு கரக்க ஓங்கிய நென்மலை; அது - இது - இரண்டும் பொருள் ஒன்றனையே சுட்டின; அது என்பது முன் காணாது இன்னதென்றறிய வாராத கனவு நிலை குறித்த சேய்மைச் சுட்டு; இது கண்ட பின் மனத்தினுட் கொண்டு கருதவருதலின் அண்மைச் சுட்டு. அதிசயித்து - அதிசயம் - கண்ணாற் கண்டாராயினும் இன்னதென் றறியவாராமையின் நிகழ்ந்த பெருமிதம். "அதிசயம் கண்டாமே" (திருவா). திருவருளின் செயல் - அருள் - காரணம்; செயல் - அதனால் நிகழ்ந்த வெளிப்பாடாகிய பொருள். கொவ்வைவாய் - கொவ்வை - கோவைக்கனி. கோவை என்பது கொவ்வை என மருவி வந்தது. கொழுநரையே - ஏகாரம் தேற்றம். திருவருள் வெளிப்படுதற்குக் காரணமாய் நின்ற உரிமை பற்றியது.கொழுநர் - தலைவர் என்பது குறிப்பு. தொழுதெழுவார் - தொழுதலும் எழுதலும் உடனிகழ்ந்த நிலை குறித்தது. "கொழுநற் றொழுதெழுவாள்" (குறள்) என்புழிப் போல; கொழுநரையே என்ற குறிப்பும் காண்க. எழுவார் - போந்தார் - என மேல் வரும் பாட்டுடன் முடிக்க. எழுவார் - எழுவாராகி முற்றெச்சம்.
|
|
|