பாடல் எண் :3170

"நாவலூர் மன்ன னார்க்கு நாயனா ரளித்த நெல்லிங்
கியாவரா லெடுக்க லாகு?; மிச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா" னென்று போந்தார்; புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமா னேவ நம்பியு மெதிரே சென்றார்.
16
(இ-ள்.) நாவலூர்.......லெடுக்கலாகும் - திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரருக்காகச் சிவபெருமான் கருணை செய்த நெல், ஆதலின் இதனை இங்குயாவர்களாற் சுமந்தெடுக்க முடியும்? (ஒருவராலுமியலாது); இச்செயல்.....யான் என்று போந்தார் - இந்தச் செயலினை அவர்க்குச் சொல்ல நான் போவேன் என்று போயினார்; புகுந்தவாறு..... ஏவ - நிகழ்ந்த படியினைத் தேவதேவராகிய சிவபெருமான் நம்பியாரூரருக்குச் சொல்லி ஏவியருளியபடி; நம்பியும்...போந்தார் - ஆரூர்நம்பிகளும் எதிரே சென்றருளினர்.
(வி-ரை.) மன்னார்க்கு - மன்னர் - தலைவர்; மன்னார்க்கு - மன்னவருக்குத் தரும்பொருட்டு.
நாயனார் - தலைவர் - இறைவர்; "நாயனீரே" (774); நாதனார் என்ற பாடமுண்டு.
மன்னனாருக்கு நாயனார் அளித்த நெல் - இங்கு யாவரால் எடுக்கலாகும் - கொடுத்தாரும், கொடுக்கப் பெற்றாரும், சொடைப்பொருளும் பெரியனவாதலின் வேறு பிறரால் எடுக்கலாகாது என்பது; இங்கு யாவரால் - இந்நிலவுகத்தில் நாதனார் அருளினாலன்றி வேறு ஏவரால். வினா எவராலும் எடுக்கலாகாதென எதிர்மறை குறித்து நின்றது; "பயனென்கொல்?" (குறள்) என்புழிப்போலக் கொள்க.
இச்செயல் முன் - "திருவருளின் செயல்" (3169) என்ற செயலும், அது யாராலும் எடுக்கலாகாத் தன்மையும்.
புகுந்தவாறு - ஏவ - இச்செயலினையும், கிழார் வரும் நிலையினையும், முன்னமே இறைவர் நம்பியாரூரருக்கு அருளிச் செய்து அதனைச் சென்று காண்பாய்! என்று ஏவியருளினார் என்க. நம்பிகள்பால் திருவாரூரிலே தாராது குண்டையூரில் தந்து அங்கு நம்பிகளுக்கு அறிவித்து ஏவியருளியவாறு பற்றி முன் (3168) உரைக்கப்பட்டது. குண்டையூர் கிழாரின் அடிமைத் திறமும், நம்பி ஆரூரரின் பெருமையும், இறைவரருள்புரியும் எளிமையும், பரவையாரின் வள்ளண்மையும், ஒருங்கே வெளிப்பட்டு உலகர் அறிந்துய்யவும், நம்பிகள் இது பற்றிய திருப்பதிகம் அருளி ஆள் வேண்டிட அவ்வாறே அருளும் திறமும் உலகர் கண்டுய்யவும் போந்த அருளின் நிகழ்ச்சி என்க. மேல் வருவன (3171-3182) பார்க்க. "ஆட்பாலவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட்பான்புகி லளவில்லை கிளக்கவேண்டா" (திருப்பாசுரம்) என்ற திருவாக்குக் காண்க. திருவரத்துறை யிறைவர்முத்துச்சிவிகை முத்துச் சின்னங்கள் முதலியவற்றை யருளி அடியார்க் கறிவித்துப், பிள்ளையாருக்கும் அறிவித்தருளியபடியினையும் (2092-2105), ஏயர்கோனார்பால் சூலையினை வைத்து, அது தீரும் வண்ணத்தினை அவர்பாலும் ஆரூர்நம்பிகள்பாலும் தனித்தனியே அறிவித்தருளும்படியினையும் (3543-3548), இவ்வாறு வரும் பிற அருளிப்பாடுகளையும் நோக்குக.
நம்பியும் - நாயனாரது ஏவலினைக் கேட்ட நம்பிகளும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
எதிரே - தம்மிடம் அறிவிக்கப் போந்த குண்டையூர்கிழாரின் எதிரே.