பாடல் எண் :3172

"மனிதரா லெடுக்கு மெல்லைத் தன்றுநென் மலையி னாக்கம்;
இனியெனாற் செய்ய லாகும் பணியன்றி" தென்னக் கேட்டுப்
"பனிமதி முடியா ரன்றே பரிந்துமக் களித்தார் நெல்"லென்
றினியன மொழிந்து தாமுங் குண்டையூ ரெய்த வந்தார்.
18
(இ-ள்.) மனிதரால்.....என்ன - இத்த நெல்மலையின் பெருக்கம் மனிதர்களால் சுமந்தெடுக்கும் அளவுட்பட்டதன்று; இனி, இது என்னாற் செய்யக் கூடிய பணியன்று என்று சொல்ல; கேட்டு - (நம்பியாரூரர்) அதனைக் கேட்டு; பனிமதி....மொழிந்து - "குளிர்ந்த சந்திரனை முடித்த சிவபெருமானன்றே அருள் சுரந்து இந்நெல்லினை உமக்கு அளித்தார்" என்று இனிய மொழிகளைக் கூறி; தாமும்....வந்தார் - தாமும் குண்டையூரினைச் சார வந்தருளினார்.
(வி-ரை.) மனிதரால்.....ஆக்கம் - மனிதரால் சுமந்தெடுத்து இங்குக் கொண்டு வந்து உய்க்கும் அளவில் அடங்குவதன்றெனவே, இறைவரருளப்பூதங்களாலேதான் இயல்வது என்றது. ஆக்கம் - பெருக்கம்.
இனி....இது - இது - இந்நெல்லைச் சுமந்து வந்து திருமாளிகையில் உய்க்கும் பணி. செய்யலாகும் - செய்யக்கூடிய.
பனிமதில்......நெல் என்று - இறைவர்தாமே உமக்கு நெல் அளித்தார் என்பது என்பொருட்டளித்தாராயின் திருவாரூரில் அளித்திருப்பர்; அவ்வாறன்றிக் குண்டையூரில் அளித்து உமக்கு அருளியமையால் உமது அன்பின் பொருட்டேயளித்தனர் என்றவாறாம்.இனியன் - இனிமையான மொழிகளை. தாமும் - அவருடனே தாமும் கூடி.
நென் மலையினோக்கம் - என்பதும் பாடம்.