விண்ணினை யளக்கு நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலைத் தொழுது போற்றி யதிசய மிகவு மெய்தி "எண்ணில்சீர்ப் பரவை யில்லத் திந்நெல்லை யெடுக்க வாளுந் தண்ணில வணிந்தார்தாமே தரிலன்றி யொண்ணா" தென்று, | 19 | (இ-ள்.) விண்ணினை.....நோக்கி -ஆகாயத்தை அளாவ உயர்ந்த நெல்மலையின் நம்பி ஆரூரர்நோக்கி; அண்ணலை......எய்தி - பெருமையுடையராகிய சிவபெருமானைத் தொழுது மிகவும் அதிசயம் அடைந்து; "எண்ணில்.....ஒண்ணாது" என்று - அளவில்லாத சிறப்பினையுடைய பரவையாரது திருமாளிகைக்கு இந்நெல்லினை எடுத்துச் சேர்க்க ஆளினையும் குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவபெருமான் தாமே தந்தருளினாலன்றி வேறெவ்வாற்றாலு மியலாது" என்று துணிந்து, (வி-ரை.) அளக்கும் - உயரத்தினை அளப்பது போன்று மேல் ஓங்குதல். மிகவும் அதிசயம் எய்தி - "அதிசயித்து" (3169) எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து - இல்லத்துக்குரியவர் மனைவியாரேயாகும் குறிப்புப் பெறப்பரவையார் இல்லம் என்றார். பரவையாரது பெருஞ் சிறப்பு இந்நெல்லினைப் பற்றி "இன்றுங்கள் மனை எல்லைக்குட்படு நெற்குன்றெல்லாம் அவ்வவரே எடுத்துக் கொள்க" என இங்கு மேலும் விளங்க நிற்கும் தன்மை காண்க. (3182) எண்ணில் சீர் - இல்லம் என்று கூட்டி இனி இறைவர்இருமுறை திருவடிதோயத் தூது தர எழுந்தருளும் பெருஞ் சிறப்பும் குறிக்க வைத்த நயமும் கண்டுகொள்க. இதுபற்றிப் பின் (3516) உரைப்பனவும், முன் திருநகரச் சிறப்பில் (90-91) விதந்து எடுத்துரைத்தவையும் பார்க்க. எடுக்க - எடுத்துக்கொண்டு உய்க்க; "அட்டித்தர" என்பது பதிகம். ஆளும் தரிலன்றி - நெல் தந்ததன்றி ஆளும் என உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை. தாமே தரிலன்றி - இறைவரது அருட் செயல்கள் அவரருளானன்றி அளத்தற் கொண்ணாது என்பது குறிப்பு. ஏகாரம் பிரிநிலை. ஒண்ணாது - பிறரெவராலும் எடுத்தற்கியலாது. என்று - எய்திப் - பாடுதலும் - என மேல் வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|