ஆளிடவேண் டிக்கொள்வா ரருகுதிருப் பதியான கோளிலியிற் றம்பெருமான் கோயிலினை வந்தெய்தி "வாளன கண்மடவாள் வருந்தாமே" யெனும்பதிகம் மூளவருங் காதலுடன் முன்றொழுது பாடுதலும், | 20 | (இ-ள்.)ஆளிட வேண்டிக் கொள்வார்- ஆள் தரும்படி வேண்டிக்கொள்வாராகி; அருகு....எய்தி - அருகில் உள்ள திருப்பதியாகிய திருக்கோளிலியிலே தமது பெருமானுடைய திருக்கோயிலினில் வந்து சேர்ந்து; வாளன....பதிகம் - "வாளன கண்மடவாள் வருந்தாமே" என்ற சொற்றொடரினையும் குறிப்பினையுமுடைய திருப்பதிகத்தினை; மூள.....பாடுதலும் - மேன்மேலும் பெருகிவரும் பெருவிருப்பத்துடனே திருமுன்பு தொழுது பாடுதலும், (வி-ரை.) ஆள் இட ஆள் தர. அருகு திருப்பதியான கோளிலி - குண்டையூரினின்றும் நேர்தெற்கில் மட்சாலை வழி அரைநாழிகையளவில் உள்ளது திருக்கோளிலி. குண்டையூர் - திருவாரூரினின்றும் தென்கிழக்காய்த் திருஏமப்பேறூர், திருக்காறாயில், திருவலிவலம் என்ற இவற்றின் வழியாய் மட்சாலைவழி 10 நாழிகையளவில் அடையத் தக்கது. குண்டையூர் பெருந்தலமன்றாதலால் நம்பிகள் அருகில் உள்ளதும் சத்தவிடங்கத் தலங்களுள் ஒன்றும் ஆகிய திருக்கோளிலிக்குச் சென்று பதிகம் பாடியருளினர் போலும். குண்டையூரின் எல்லையடங்கவும் நென்மலைப் பிறங்கல் ஓங்கி ஆளியங்காவாறு வழி அடைத்ததாதலின் அருகு உள்ள பதியிற் சென்றனர்என்று கருதவுமிடமுண்டு. இந்நென்மலை பின்னர்த் திருவாரூர் அடங்கவும் நிறைந்து (3179) நெறிபலவும் போக்கரிதாக நிறையும் (3181) திறமும் இங்குக் கருதுக. "வாளன கண்மடவாள் வருந்தாமே" என்னும் பதிகம் - பதிகக் கருத்துரைத்தது; பதிக முதற்பாட்டு; நெல்லிட ஆள் வேண்டுவதன் காரணம் கூறும் வகையில் இது பதிகக் குறிப்புமாயிற்று. பதிக முழுதும் இக்குறிப்பு விரவி வருதலும் காண்க. திருமுதுகுன்றப் பதிகமும் இவ்வாறே காணத் தக்கது. மூளவரும் காதல் - மேன்மேற் பெருகும் பெருவிருப்பம்; மூளுதலாவது இந்நெல்லினால் இனித் திருவாரூர் வாழ்வாரும் அடியார்களும் பயன் பெற உள்ளநிலை பற்றி எழுவதாம். முன் - திருமுன்பு; காலத்தால் முன்னர் என்றலுமாம். பதிகம் - பாடுமுன் தொழுது பாடுதல் மரபு. பதிகம் பாடித் திருவாக்குக் கேட்ட பின்பு தொழுதுல் மேற்காண்க. "தொழுதேத்தி" (3176) பாடுதலும் - நிகழ்ந்தது - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|