"பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை யளவன்றி மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியவா ரூர்நிறையப் புகப்பெய்து தருவனநம் பூதங்க" ளெனவிசும்பில் நிகர்ப்பரிய தொருவாக்கு நிகழ்ந்ததுநின் மலனருளால். | 21 | (இ-ள்) நின்மலனருளால் - சிவபெருமானது திருவருளினாலே; நிகர்ப்பரியது ஒரு வாக்கு - ஒப்பற்ற ஓர்திருவாக்கு; பகற்பொழுது.......என - "பகற் பொழுது கழிந்த பின்பு பரவையாரது மனையளவு மட்டுமன்றி மிகப்பெருகும் இந்நெல்லினை உலகில் விளங்கிய திருவாரூர்நிறையப் புகும்படி கொண்டு நம்முடைய பூதகணங்கள் சேர்த்துத்தருவன" என்று; விசும்பில் நிகழ்ந்தது - ஆகாயத்தில் உண்டாயிற்று. (வி-ரை.) "பகற்பொழுது....பூதங்கள்" என - இது பதிகங்கேட்டவுடன் இறைவர் விசும்பிடை நின்று கூறிய அசரீரி வாக்கு. பகற்பொழுது கழிந்ததற்பின் - சிவகணங்களின் செயல் மக்கள் கண்ணுக்குப் புலப்படா வகை நிகழுமாதலால் சென்மலை முழுதும் குண்டையூரினின்றும் 10 நாழிகையளவில் திருவாரூரில் உய்க்கும் நிலை, மக்கள் காணாவண்ணம் பகற்பொழுது கழிந்ததற்பின் - பெய்து தருவன என்றார். பரவை மனையன்றி - ஆரூர் நிறைய - பின் விளைவு (3182) காண்க. இந் நெல்மலை முழுதும் பரவையார்மாளிகையொன்றின்கட் சேர்க்க இயலாதென்பது கருத்து. பரவை யில்லத்து எடுக்க ஆள் (3173) வேண்டிய நம்பியாரூரருக்கு இந்நெல் பரவையார்மனையளவின்றி ஆரூர்நிறையப் பெய்யப் பெறுவன என்றபடி. உலகில் விளங்கிய - உலகத்தில் "ஊழிவெள்ளமும் கொள்ளாக் கழனிஆரூர்" என்றும், "முன்னோ பின்னோ திருவாரூர்கோயிலாக்கொண்ட நாளே" என்றும் மேலும் புகழநின்ற பண்பினாலும் திருத்தொண்டத் தொகை பெறநின்ற பண்பினாலும், பலவாற்றானும் விளக்கம் பொருந்திய. நம் பூதங்கள் - நமது சிவகணங்களாகிய குண்டைக் குறட் பூதங்கள்; "நீடு தேவர்நிலைகளும் வேண்டிடின், நாடு மைப்பெரும் பூதமு நாட்டுவ" (16) என இவைகளின் தன்மையை நூன்முகத்தே உரைத்தவை இங்கு நினைவு கூர்தற்பாலன. விசும்பில் - அருளால் - வாக்கு நிகழ்ந்தது என்க. அசரீரி வாக்கு என்பார்நிகர்ப்பரிய என்றார். ஒலி வெளிப்படுதற்குரிய கருவிகளின்றி நிகழ்வதாலும், சிவனருள் புலப்பட வருதலானும் நிகர்ப்பரிதாயிற்று. |
|
|