பாடல் எண் :3178

கோவைவாய்ப் பரவையார் தாமகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு மிகவின்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும் வருவார்தந் திருவருளின்
ஏவலினா லவ்விரவு பூதங்கண் மிக்கெழுந்து,
24
(இ-ள்) கோவைவாய்....இருந்ததற்பின் - கோவைக் கனிபோலும் திருவாயினையுடைய பரவையார் மகிழும்படி நிகழ்ந்த செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி அவரோடுங் கூடி மிக இன்பமுடன் இருந்த பின்பு; சேவின்மேல்...ஏவலினால் - இடபத்தின்மேல் உமையம்மையாருடனே எழுந்தருளி வரும் இறைவரது திருவருளின் ஏவுதலினாலே; அவ்விரவு...மிக்கெழுந்து - அந்த இரவிலே சிவபூதங்கள் மிக்கு எழுந்து;
(வி-ரை) கூறி - குண்டையூரிற் கண்டவற்றையும், இறைவர்பால் வேண்டியதனையும், இறைவர் அசரீரியாக அருளியதனையும் கூறி.
மிக இன்புற்று இருந்ததற்பின் - இறைவரது அருட்டிறங்களை எண்ணி எண்ணி மகிழ்ந்து திளைத்திருந்த பின். அந்நாண் முழுதும் அவ்வெண்ணங்களே மிக்கன என்பது.
சேவின் மேல் உமையோடும் வருவார் - சிவபெருமான். இத்தன்மையாற் கூறியது ஈண்டு அருளின் வெளிப்பாடு குறித்தற்கு.
ஏவலினால் - நென்மலையினைத் திருவாரூரிற் கொண்டுய்க்கும்படி ஏவியருளியபடி.
பூதங்கள் - சிவகணமாகிய பூதங்கள். "குறட்பூதப் படை" (3179) என மேற்கூறுதல் காண்க. "குண்டைக்குறட் பூதம்"(தேவா).
மிக்கெழுந்து - கவர்ந்து - நிறைவித்தே - ஆக்கி - அமைத்தன என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.