பாடல் எண் :3179

குன்டையூர் நென்மலையைக் குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் றிருவாரூ ரடங்கவுநென் மலையாக்கிக்
கண்டவரற் புதமெய்துங் காட்சிபெற வமைத்தனவால்.
25
(இ-ள்) குண்டையூர்...நிறைவித்தே - அக்குறட் பூதப் படைகள் குண்டையூரிலிருந்த நென்மலையைக் கைக்கொண்டு எடுத்துச் சென்று, வண்டு உலவுதற்கிடமாகிய கூந்தலையுடைய பரவையாருடைய திருமாளிகையின்கண் நிறையச் செய்தே; அண்டர்பிரான்...ஆக்கி - தேவர் பெருமானது திருவாரூர் முழுவதும் நென்மலையாக உய்த்து; கண்டவர்....அமைத்தன - கண்டவர்கள் யாவரும் அற்புதமடையும்படி காட்சிப்பட அமைவு செய்தன; (ஆல் - அசை)
(வி-ரை) கவர்ந்து - கைக்கொண்டெடுத்து. மாளிகையை நிறைவித்தே - இது முதலிற் செய்த செயல். மாளிகையிடங் கொள்ளுமளவும் நிறைவு செய்தன. ஏகாரம் தந்து பிரித்துக் கூறியதும் அப்பொருட்டு. ஏகாரம் பிரிநிலை.
திருவாரூர் அடங்கவும் நென்மலை ஆக்கி - இது திருமாளிகையினை நிறைவாக்கிய பின் எஞ்சிய நென்மலையைப் பற்றிய செயல். அடங்கவும் - முழுவதும். மலை ஆக்கி - நகரின் திருவீதிகளெங்கும் மலை போலக் குவித்து.
அற்புதமெய்தும் காட்சி- நெல்மலையினைக் கண்டவர்கள் அற்புதமாகிய மெய்ப்பாட்டுடன் காணத் தக்க காட்சி; அற்புதமாவது,நெல்மலைகளின் அளவேயன்றி, அவை போந்தவாறும், வகையும், பிறவும் அறியமுடியாதபடி உள்ளத்தெழும் பெருமித உணர்ச்சி. "அற்புத மறியேனே" (திருவா). மேற்பாட்டுப் பார்க்க.