அவ்விரவு புலர்காலை யாரூரில் வாழ்வார்கண் "டெவ்வுலகில் விளைந்தனநென் மலையிவை"யென் றதிசயித்து "நவ்விமதர்த் திருநோக்கி னங்கைபுகழ்ப் பரவையார்க் கிவ்வுலகு வாழவரு நம்பியளித் தன"வென்பார், | 26 | (இ-ள்) அவ்விரவு புலர்காலை - பூதங்கள் அவ்வாறு ஆரூர் அடங்க நென்மலையாக்கிய அந்த இரவு விடியும் காலையில்; ஆரூரில்...அதிசயித்து - திருவாரூரில் வாழ்வார்கள் பார்த்து "இந்நெல் மலைகள் எவ்வுலகில் விளைந்தன?" என்று அதிசயப்பட்டு; நவ்வி...என்பார் - "மானின் கண்போன்ற மதர்த்த திருநோக்கினை உடைய நங்கையாராகிய புகழினை உடைய பரவையாருக்கு இவ்வுலகம் வாழும் பொருட்டு வந்தருளிய நம்பிகள் அளித்தன இவை" என்று பற்பலவும் சொல்வார்களாகி; (வி-ரை) அவ்விரவு - இறைவரது ஏவலினால் பூதங்கள் நெல்லினைக் குண்டையூரினின்றும் திருவாரூரின்கண் கொண்டுய்த்த அந்த இரவு என அகரம் முன்னறிசுட்டு. "அவ்விரவு" (3178). புலர்காலை - இரவு நீங்கி விடியும் நேரத்தில். எவ்வுலகின்...அதிசயித்து - இது திருவாரூர் வாழ்வார்கள் நெல்லினைக் கண்டபோது முதலில் எழுந்த அவர்களது மன நிகழ்ச்சி; கண்டு அதிசயித்து - கண்டதனால் அதிசயமடைந்து; "அதிசயம் கண்டாமே" (திருவா). நவ்விமதர்த் திருநோக்கின் - நவ்வி - மான். இங்குப் பெண்மான் பார்வை குறிக்கும். "விழியாற் பிணையாம்" (சிற். கோ). மான் நோக்காவது மருண்ட பார்வை. அன்பு புலப்படுக்கும் பார்வை என்பது உட்குறிப்பு (3182); பின் கூறும் வரலாற்றின் முற்குறிப்பு. பரவையார்க்கு அளித்தது என்க. அளித்தது - அளிக்கப்பட்டது. நம்பி - நம்பிகளால். இவ்வுலகு வாழவரும் - "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்" (35). |
|
|