பாடல் எண் :3182

வன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பார்
"இன்றுங்கண் மனையெல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்றங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்க"வென
வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.
28
(இ-ள்) மிக்கபுகழ்ப் பரவையார் - மிகுந்த புகழினையுடைய பரவையார்; வன்றொண்டர்....சிறப்பார் - தமக்கு வன்றொண்டராகிய நம்பிகள் அளித்த நெல்லினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி பொருந்தியவராய்; "இன்று...அறைவித்தார் - "இன்று உங்கள் மனைகளின் எல்லைக்குட்படும் நெல் எல்லாம் அவ்வவரும் தத்தம் செல்வமிக்க மாளிகைகளினுட் புகும்படி எடுத்துப் பெய்து கொள்க" என்று வெற்றி முரசம் அறையும்படி செய்வித்தார்.
(வி-ரை) வன்றொண்டர் - முன் 3164 - 3165-ல் உரைத்தவை பார்க்க. குண்டையூர் கிழார் உட்கொண்டு வழிபட்ட கருத்தைக் குறித்து நின்றது.
மகிழ்சிறத்தல் - மகிழ்ச்சி மீக்கூர்தல்.
"இன்று உங்கள்....கொள்க" என - இது பரவையார் திருவாரூர் வாழ்வார்க்கு முரசறைந்து அறிவித்த செய்தி. இது பரவையாரின் பெருமையினைப் புலப்படுத்துவதாகும். நம்பிகள் பரவையார் பொருட்டுப் பொன்னும், பிறவும் வேண்டி இறைவரைப் பாடிப் பெறுகின்றார் எனச் சில அறிவில்லா மாக்களிடை வழங்கும் ஒரு பிழையான எண்ணம் மிகத் தவறென்பது இதனால் விளங்கும். அவ்வவர் மனை எல்லைக்குட்பட்ட அளவு நெல்லை அவ்வவரே எடுத்துக் கொள்ளக் கடவர் என்பதாம். "கோவைவாய்ப் பரவையார்" (3178); கொவ்வைவாய்ப் பரவையார்"(3169) என்றவை யெல்லாம் இவ்வாறு அருள் கனிந்த மொழிகள் வெளிவரும் இயல்பின் குறிப்புப்பட நின்றன. வற்காலத்தின் கொடுமையால் மக்கள் நெல் பெறாது வருந்தும் அந்நாளில் பரவையார் செய்த செயல் காலத்தினாற் செய்த பெருநன்றியுமாதல் கருதுக.
பொன்றங்கு மாளிகை - திருவருட் செல்வ நெல்நிறைதற் குறிப்பு.
புகப்பெய்துகொள்க - தாமே எடுத்துக்கொள்க.
வென்றி - ஈடணாத்திரயம் என்பவற்றுள் பொருட்பற்று அற எறிந்த வெற்றி.
முரசறைவித்தல் - அவ்வவர்க்குத் தனித்தனியாகவன்றி யாவரும் அறியும் படி பொது அறிவிப்பு நிகழ்த்தும் மரபு. தனித்தனி அறிவிக்க நெறியிடங்கொடாமையும் குறிப்பு. மேல்வரும் பாட்டில் "மறுகதனில் ஆளியங்கப் பறையறைந்த" என்பது காண்க.