பாடல் எண் :3183

அணியாரூர் மறுகதனி லாளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கு நெற்கூடு
கணியாமற் கட்டிநகர் களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார்.
29
(இ-ள்) அணியாரூர்...களி கூர - அழகிய திருவாரூரின் வீதிகளில் ஆட்கள் செல்லும் வழியுண்டாகப் பறைசாற்றுவிக்கப் பணித்தமையினாலே தத்தம் மனைகளை நிறைவித்தும் அவரவர்களுக்குள்ள பக்கவிடங்களிலெங்கும் நெற்கூடுகளை அளவின்றிக் கட்டி நகரமக்கள் மகிழ்ச்சி பெருகக் கண்டு; பரவையார்....பணிந்தார் - பரவையார் மணி ஆரம் பூண்ட மார்பினையுடைய வன்றொண்டரை வந்து பணிந்தனர்.
(வி-ரை) மறுகதனில் ஆளியங்க - வீதிகளில் மக்கள் நடந்து செல்ல இயலாதபடி நென்மலை நிறைந்திருந்த நிலை நீங்கி ஆட்கள் செல்ல வழியுண்டாக; "நெறிபலவும் போக்கரிதாயிடக் கண்டு" (3181) என்றது காண்க.
பறையறைந்த பணி - முன் பாட்டிற் கூறிய கட்டளை. கணியாமல் - அளவில்லாமல் - எண்ண முடியாதபடி. நெற்கூடு கட்டி - நெல்லைக் கூடுகட்டிச் சேமித்து. நகர் களிகூர - நகர மக்கள் மகிழ; நகர் - நகர மக்கள் - ஆகு பெயர். நகர் களி கூரக் கண்டு என்க. "ஈத்துவக்கும் இன்பம்" (குறள்).
பரவையார்...பணிந்தார் - தாம் அவ்வின்பம் பெறுவதற்குக் காரணர் வன்றொண்டரேயாம் என்பது கருதிப் பணிந்தனர்.
வன்றொண்டர் - இப்பெயராற் கூறுதல் பற்றி முன் உரைத்தமை பார்க்க. (3165 - 3167 - 3182).