பாடல் எண் :3185

குலவுபுகழ்க் கோட்புலியார் குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூர ரெழுந்தருள வடிவணங்கி
நிலவியவன் றொண்டரஃ திசைந்ததற்பின் னேர்ந்திறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார் மீண்டுந்தம் பதியணைந்தார்.
31
(இ-ள்) குலவுபுகழ்க் கோட்புலியார் - விளங்கும் புகழினையுடைய கோட்புலியார்; குறையிரந்து...அடி வணங்கி - தமது பதியினிடத்து அளவற்ற புகழினையுடைய நம்பியாரூரர் எழுந்தருள வேண்டுமென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் குறையிரந்து நின்று; நிலவிய...இறைஞ்சி - நிலைபெற்ற வன்றொண்டர் அதனை இசைந்த பின்னே மீண்டும் அவர் திருமுன்பு வணங்கி; பலர் புகழும்...அணைந்தார் - எல்லாரும் புகழத் தக்க பண்புடைய அக் கோட்புலியார் மீளவும் தமது திருப்பதியினுள் சென்று அணைந்தனர்.
(வி-ரை) குறையிரத்தல் - தமது குறையாகிய விருப்பத்தைக் கூறி வேண்டுதல்; இக்குறையாவது தமது பதியில் நம்பி ஆரூரர் எழுந்தருளுதல்.
குலவுபுகழ் என்றது அவரது அன்பின் மேன்மையும் சரித வரலாறும் குறிக்க எழுந்தது. அவர்தம் புராணம் பார்க்க.
அலகில்புகழாராதலின் எனக் கோட்புலியார் குறையிரந்து விண்ணப்பித்ததற்குக் காரணக் குறிப்புப்படக் கூறியவாறு.
அடிவணங்கிப், பின்....அவர் இசைந்தருள, இறைஞ்சி அணைந்தார் - எனக் கூட்டி முடிக்க.
பண்பினார்- கோட்புலியார்; இறைஞ்சிப்பின், அப்பண்பினார் - எனக் கூட்டுக.
தொண்டரது விசைந்ததற்பின் - நேர்ந்ததற்பின் - என்பனவும் பாடங்கள்.